Breaking News
recent

ரேடியோ ஸலாம் மாறுமா?


ஐக்கிய அரபு அமீரகத்தில் 106.5 அலைவரிசையில் ரேடியோ ஸலாம் என்ற தமிழ் FM வானொலி இயங்கி வருவது அமீரக தமிழ் மக்கள் அறிந்ததே.

BJP, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இன்னும் ஆளே இல்லாத இந்து இயக்கங்களின் செய்திகளை தவறாமல் சொல்லும் இதற்கு முஸ்லிம் இயக்கங்களின் எவ்வளவு பெரிய போராட்டங்களாக இருந்தாலும் கண்களுக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமே.

அந்தப் போராட்டங்களால் நாடே குலுங்கினாலும் இவர்கள் கவலைப்பட மாட்டார்கள். உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஜாதி மதம் பாராமல் விடுவிக்க வேண்டும் என்று முஸ்லிம் இயக்கங்கள் போராடி வருகின்றன. 

இதைப்பற்றியெல்லாம் வாயே திறக்காதவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடுபவர்களை விடுவித்தால் நாட்டின் அமைதி கெட்டு விடும் என்று பாஜக திருவாய் மலர்ந்துள்ளதை ஒரு செய்தியாக சொல்கிறார்கள். ஊரில்தான் ஊடகங்களில் பாரபட்சம் என்றால் முஸ்லிம்கள் அதிகம் வாழும் முஸ்லிம் நாட்டிலுமா இப்படி?

இது குறித்து முகநூலில் பதிவிட்ட பொழுது நிறைய மக்களின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கிறது என்று தெரிய வந்தது.

எழுத்தாளரும், கவிஞரும், பொறியாளருமான ஜா. முஹைதீன் பாட்சா முகநூலில் தனது கருத்தை எனது பதிவின் பின்னூட்டமாக இவ்வாறு தெரிவித்திருந்தார்:

“உண்மை, நீங்கள் மட்டுமல்ல. இது அமீரகத்தில் இருக்கும் எல்லோரும் தொடர்ந்து கவனித்து வரும் நிகழ்வு. இது ரேடியோ தொடங்கிய காலம் முதல் இன்று வரை தொடர்கதையாகிக் கொண்டுதான் இருக்கிறது. ஏதோ சின்னச் சின்ன செய்தியானாலும் இந்துத்துவ ஃபாசிச செய்திகளாக இருந்தால் உடனே அதை பெரிய செய்தி போலவும், முஸ்லிம் எதிர்ப்பு செய்திகள் யாரோ ஒரு வழிப்போக்கன் சொன்னால் கூட அதை தலைப்புச் செய்தியாகவும் சொல்லி முக்கிய செய்தியாக்குவார்கள். இவர்கள் மோடிக்கு அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பே தூக்கிய காவடிகள் கொஞ்சமல்ல.

இந்த ரேடியோவின் ஃபாசிசப் போக்கை பலரும் பல சந்திப்புகளில் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதை ரேடியோ சலாம் Radio Salaam 106.5fm திருத்திக்கொள்ள வேண்டும். இதை அமீரகத்தில் உள்ள எல்லா தரப்பும் நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அவர்கள் மாறினால் அவர்களுக்கு நலம்.”

அமீரகத்தில் இயங்கி வரும் மலையாள பண்பலை வானொலிகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ரேடியோ ஸலாம் முஸ்லிம்கள் குறித்து, அதுவும் தமிழ் முஸ்லிம்கள் குறித்து மிகக் குறைவான செய்திகளையே தருகின்றது. மலையாள வானொலிகள் அதிகமான செய்திகளைத் தருவதுடன், முஸ்லிம்கள் குறித்து ஓரளவு நடுநிலையான செய்திகளையே வெளியிடுகின்றன.

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று இஸ்லாமிய உலகின் எதிர்மறையான செய்திகளை தவறாமல் ஒலிபரப்பும் ரேடியோ ஸலாம், முஸ்லிம்கள் குறித்த நேர்மறையான, ஆக்கபூர்வமான, நடுநிலையான செய்திகளை மிக அரிதாகவே சொல்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்பாக இங்கே பாஜகவுக்கான பிரச்சார பீரங்கி போல் செயல்பட்டது ரேடியோ ஸலாம். அது ஒலிபரப்பிய அனைத்து செய்திகளிலும் பாஜகவின் பெயர் வராமல் இருந்ததில்லை. மோடி புகழ் பாடாமல் ஒரு செய்தி கூட இருந்ததில்லை.

அமீரகத்திலுள்ள தமிழ் மக்களுக்காக நடத்தப்படும் இந்த வானொலி இங்குள்ள தமிழ் மக்களின் நிலையை, தமிழகத்தின் நிலையை, குறிப்பாக இங்கே அதிகமாக வாழும் தமிழ் முஸ்லிம்களின் நிலையை, அவர்களின் வாழ்வாதாரங்களை, அவர்களின் அவலங்களை, அவர்கள் தங்கள் வாழ்நிலைகளை மேம்படுத்துவதற்காக எடுக்கும் முயற்சிகளை எடுத்துரைப்பது நல்லது. அதுதான் ஊடக தர்மம்.

அமீரக தமிழ் மக்களின் அவாவை ரேடியோ ஸலாம் நிறைவேற்றுமா? நடுநிலையோடு செய்திகளை வெளியிடுமா?

MSAH
Thanks thoothuonline
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.