Breaking News
recent

மிருகங்கள் பலியிடுவதை தடை செய்ய சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு.!


மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

ஒட்டகம் பலியிடுதல்

மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28ஐ நீக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சமீபத்தில் மிருக நலவாரியம் பக்ரீத் பண்டிகையின்போது ஒட்டகங்களை பலியிடுவதை தடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் வெளியிட்ட கடிதம் ஒன்றில் குறிப்பிட்டதும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டது. 

மதங்களின் பெயரிலோ அல்லது வேறு எந்த காரணத்தினாலோ மிருகங்களை பலியிடுதல் அரசியல் சட்டத்தின பிரிவுகள் 14 (சமஉரிமை) மற்றும் 21 (வாழ்வதற்கான உரிமை) ஆகியவற்றுக்கு எதிரானது என்றும் கூறப்பட்டது.

நீக்க வேண்டும்

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராஜூ ராமச்சந்திரன், இந்த பிரச்சினையை நடுநிலையுடன் அணுக வேண்டும். மிருகங்களை பலியிடும் விஷயத்தில் மதம்சார்ந்த விஷயங்களை மீறி மிருகங்கள் பலியிடப்படுவதன் மூலம் சித்ரவதைக்கு ஆளாவது தடுக்கப்பட வேண்டும். எனவே மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை மிருகவதை தடை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.

பாரம்பரிய விஷயங்கள்

இதனை கேட்ட நீதிபதிகள், மிருகவதை தடை சட்டத்திலேயே மதரீதியான காரணங்களுக்காக மிருகங்கள் பலியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன்பாடு இருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.