மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்ததால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சோதனை ஓட்டம்
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
மழை பெய்து வருவதால் மின்சாரத்தின் தேவையும், பயன்பாடும் குறைந்து வருகிறது. அதேநேரம் மின்சாரத்தின் உற்பத்தியும் குறைந்துவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
பொதுவாக தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனல்மின்சாரத்தின் பங்களிப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அனல்மின்சார நிலையத்தில் தற்போது 1,210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் மின்நிலையங்களில் எந்திர கோளாறு ஏற்பட்டு மின்சார உற்பத்தி தடைப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களில் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் புதிதாக அமைக்கப்படும் அனல்மின்சார நிலையங்கள் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யாமல் சோதனை ஓட்டத்திலேயே ஆண்டு கணக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவற்றை வர்த்தக ரீதியில் கொண்டு வருவதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இவற்றை தீர்க்க போர்க்கால நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் மழை வந்தால் போதும்
இதுதவிர தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் உற்பத்தி செய்யும் யூனிட்டிலும் அடிக்கடி கோளாறு ஏற்படுகிறது. இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த 2 நாட்களாக நல்ல மழை இருந்ததால் மின்சார பயன்பாட்டின் அளவு வெகுவாக குறைந்தது. ஆனால் மின்சார உற்பத்தி தேவையை விட குறைந்து விட்டது. ஒரு சில நாட்கள் மட்டும் மழை பெய்தால் போதாது, தொடர் மழை பெய்து வந்தால் மின்சாரத்தின் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் அந்த நிலை இல்லாதால் மின்தடை என்பது தற்போது தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறிவிக்கப்படாத வகையில் மின்சாரத்தின் உற்பத்தி மற்றும் தேவையை பொறுத்து நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளில் ஒரு குறிப்பிட்ட மணிநேரமும் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. தொழிற்சாலை நடத்துபவர்கள் தொடர்ச்சியாக 8 மணிநேரம் மின்சார வழங்கினால் ஒரு ஷிப்ட் பணி செய்ய முடியும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மின்பற்றாக்குறை நீங்கும்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அந்த காலகட்டத்தில் மின்பற்றாக்குறையை போக்க காற்றாலை மின்சாரம் ஓரளவு கைகொடுத்தது. தற்போது அதே போன்று வடகிழக்கு பருவ மழை நன்கு பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. ஆனால் காற்றாலைகளின் மின்சார உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே தான் இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி வெகுவாக பாதித்துள்ளது. பருவ மழை நன்றாக பெய்தால் தான் மின்சார உற்பத்தி உயர வாய்ப்பு உள்ளது.
புதிய மின்உற்பத்தி
புதிய மின்உற்பத்தி திட்டங்களை விரைவில் செயல்படுத்துவதற்கான பணியை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகளும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் தமிழகத்தில் புதிதாக மின்உற்பத்தி நிலையங்கள் குறித்த திட்டங்கள் விரைவில் வர உள்ளன.
தமிழகத்தில் தற்போது தற்காலிகமான முறையில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை ஓரளவு போக்குவதற்காக தமிழகத்தில் சோதனை ஓட்டம் முறையில் செயல்படும் அனைத்து புதிய அனல் மின்நிலைய உற்பத்தியை வர்த்தக ரீதியில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் மின் நிலைமை சீரடையும்.
இவ்வாறு மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் தமிழகத்தில் திருச்சி, மதுரை, கோவை போன்ற மாநகரங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக