சுகாதாரத்துறை ஊழியர்களிடமும், கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகளிடமும் தொடர்பு ஏற்படுத்துவதற்காக புதிய இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 10588 என்ற அந்த இலவச உதவி எண்ணை சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகள் தொடர்பு கொண்டு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அடுத்த 90 விநாடிகளுக்குள், அவர்களுக்கு மறுமுனையில் இருந்து அழைப்பு வரும். இந்த அழைப்புகளைக் கவனிப்பதற்கென்றே 86 முகவர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணை முதலில் தொடர்பு கொண்டு, உள்ளூர் சுகாதார மையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், ஊட்டசத்து மருந்துகள், இரும்பு சத்து மாத்திரைகள் குறித்து தெரிந்து கொள்வர்.
பின்னர் அந்த கிராமத்தின் ஆஷா ஊழியர்களைத் தொடர்பு கொண்டும், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ முறைகள் குறித்து கேட்டறிவர்.
மேலும் போதிய அளவுக்கு தடுப்பூசிகள், ஊட்டசத்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளனவா என்பதையும் அறிந்து கொள்வர். கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தின் பிரசவ அறையில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த விவரங்களும் கேட்டறியப்படும். பின்னர் அதற்கேற்றபடி உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த வசதி தற்போது 13 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் பயனாளிகள் பேச முடியும். குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 புதிய பிராந்திய மொழிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஆதாரம் : தி இந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக