Breaking News
recent

4000 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சந்தையாக விளங்கிய துபாய்.!


துபை கடற்கழிமுகம் (Creek) தற்போது முன்னேற்றம் அடைந்ததன் விளைவாகத் தான் நவீன உலகில் சர்வதேச சந்தை முனையமாக விளங்குகிறது என்று நினைப்பது தவறு என்பதை நிரூபித்துள்ளது 'சாரூக் அல் ஹதீத்' (Saruq Al Hadid) எனும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்.

சர்வதேச கடற்வழி மற்றும் நில வழித்தடத்தின் (Trade Link Cross Roads of Sea Route & Land) மையமாக விளங்கும் துபை நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில், அபுதாபி எல்லையருகே அமைந்துள்ள 'ருப் அல் காலி' (Rub Al Khali) பாலைவன பிராந்தியத்தில் அமைந்துள்ள 'சாரூக் அல் ஹதீத்' எனும் அகழ்வாய்வு பகுதியில் கிடைத்திருக்கும் சுமார் 900 வகையான பழமையான பொருட்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய துபை பல்வேறு உலக நாடுகளான எகிப்து, சிரியா, மெசப்படோமியா (ஈரான், ஈராக்), பஹ்ரைன் (Current Dilmun Area), இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் கிழக்கத்திய மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் அன்று கொண்டிருந்த வர்த்தக தொடர்புகளையும், சர்வதேச சந்தை முனையமாக இன்று போல் அன்றும் கலியுக கால (Iron Age) துபை திகழ்ந்துள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.


சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மூன்றாம் துத்மோஸ் (Thutmose III [the sixth pharaoh of the 18th dynasty] என்கிற 18வது வம்ச பாரோ (பிர்அவ்ன்) மன்னனின் அரசு முத்திரை, இந்தியாவின் ஆபரணங்கள் மணிமாலைகள், பஹ்ரைனின் பாம்பு சிற்பங்களுடைய மண் பாண்டங்கள், சிரியாவின் ஒலிவ (Olive) மரச்சாமான்கள், மெசப்படோமியாவின் நறுமண தூபக் கால்கள் (Incense Burners) என பண்டைய சர்வதேச வணிகப் பொருட்களுடன் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், ஷார்ஜாவின் 'அல் மஹிலா' அகழ்வராய்வு பகுதியில் கிடைத்ததை போன்ற தங்க இழை ஆபரணங்களும், அல் அய்ன் ஓமன் எல்லையில் அமைந்துள்ள அல் ஹஜர் மலை பிராந்திய விவசாய பொருட்களும், ஒட்டக எலும்புகளும் கிடைத்துள்ளன ஆனால் அவர்கள் கடற்பயணம் செய்ததற்கான படகு போன்ற எத்தகைய ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.
பொதுவாக, மனித நாகரீகம் என்பது ஆறு மற்றும் கடல் பிரதேசங்களை ஒட்டியே தழைத்தோங்கும் ஆனால் 'சாரூக் அல் ஹதீத்' நாகரீகமும் வணிகமும் பாலைவனத்தின் உள்ளே நிகழ்ந்திருப்பது ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது. இன்னும் தோண்டத் தோண்ட பல்வேறு முடிச்சுக்கள் அவிழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
துபை ஷின்டாகா அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் நடப்பு ஜூலை 3 ஆம் தேதி (03.07.2016) அன்று துபை ஆட்சியாளர் ஷேக். முஹமது அவர்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 'சாருக் அல் ஹதீத்' சிறப்பு அரும்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.
'சாரூக் அல் ஹதீத்' அகழ்வாராய்ச்சியை ஒட்டி எழும்பியுள்ள விடைதெரியாத அல்லது எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம் என நம்பக்கூடிய புதிர்கள் சில,

1. எங்கிருந்து இந்த மக்கள் வந்தார்கள்? அவர்களின் இனமென்ன? மொழி என்ன? மதமென்ன?

2. பண்டைய நகரீக மக்கள் தெரிவு செய்தது போல் கடலோரத்தையோ மலையடிவாரங்களை தேர்வு செய்யாமல் நட்டநடு பாலைவன வாழ்வை தேர்ந்தெடுத்ததேன்?

3. அவர்களின் தினசரி வாழ்வு எப்படிப்பட்டது? எத்தகைய உணவு, உடை அவர்களுடையது?

4. அவர்களின் உறைவிடம் எது? கல்லறை எங்கே?

5. அவர்கள் எங்கிருந்து உலோகங்களையும், தங்கத்தையும், இரும்பையும் இங்கு கொண்டு வந்தார்கள்?

6. போக்குவரத்திற்கு ஒட்டகத்தை தவிர வேறு என்ன வகை வாகனங்களை பயன்படுத்தினார்கள்? படகுகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்களா?

7. அவர்கள் உபயோகித்த பல பொருட்களின் மீதும் பாம்பு உருவம் பதிக்கப்பட்டுள்ளது ஏன்? பாம்பு புனிதமா அதை வணங்கினார்களா?

8. சிப்பிகளின் மீது 6 கால் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ள புதிரென்ன?

9. காப்பு போன்ற பெரிய அளவிலான அணிகலன்கள் எதற்காக? ஓட்டகத்தை அலங்கரிக்கவா அல்லது வேறு நோக்கத்திற்கா?

10. ஏன் அவர்கள் பித்தளை கைப்பிடியுடன் இரும்பு கத்தி / வாள்கள் போன்றவற்றை இரு உலோக இணைப்புடன் தயாரித்தனர்?

11. ஓலிவ மரச்சாமான்களை அவர்கள் சிரியாவிலிருந்து இறக்குமதி செய்தார்களா? அல்லது ஒலிவ மரங்களையே இங்கு விளைவித்தார்களா?

12. நடைபெறவுள்ள துபை 2020 எக்ஸ்போவின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கத்தில் செய்யப்பட்ட பொத்தான் (கீழே படத்தில் காண்க) போன்ற பொருள் அந்த மக்களிடையே வாழ்ந்த செல்வந்தர்கள் அல்லது அரசர்களுடைய உடைகளை அலங்கரித்தவையா?


13. விரல்கள் போன்று உலோகத்தில் செய்யப்பட்டுள்ளவை என்ன? அவை குழந்தைகள் விளையாடும் பொம்மைகளா அல்லது யதார்த்தமாக கொல்லர்களால் செய்யப்பட்டதா?

14. பிரமாண்ட பானைகள் (தாழிகள்) எதற்காக பயன்படுத்தினார்கள்? வெறும் அலங்காரப் பொருளா? அல்லது தண்ணீர், எண்ணெய் சேமிக்கவா?

15. எப்போது அவர்கள் வாழ்வும், நாகரீகமும் முற்றுப்பெற்றது? அங்கிருந்து அவர்கள் சென்ற காரணமென்ன?

என அகழ்வாராய்ச்சியாளர் எழுப்பும் கேள்விகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை, நடந்து கொண்டிருக்கும் அகழாய்வு பணியும் முற்றுப் பெறவில்லை.

மூலமும் படங்களும்: கல்ஃப் நியூஸ்
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.