Breaking News
recent

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள்..!


தமிழ் நாட்டில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப்பெற்றிருக்கின்றன.

எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலகிரி மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்பது மட்டும் விதிவிலக்கு.

தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாக பெயர்மாற்றம் பெற்று வந்துள்ளன.

ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று அந்தப் பெயர்கள் நீக்கப்பட்டு மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன.
அரியலூர் மாவட்டம்
2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம்
பாம்பன் பாலத்துக்காக புகழ்பெற்ற இராமேஸ்வரம் நகரம் இராமநாதபுரம் மாவட்டத்தில்தான் அமைந்திருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்துக்கு வடக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே மதுரை மாவட்டமும் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக இராமநாதபுரம், பரமக்குடி, இராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன.
ஈரோடு மாவட்டம்
பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் ஈரோடை எனப்பெயர்பெற்று பின்னர் அதுவே ஈரோடு ஆனது. ஈரோடு மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, 1979-ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உருவானது.
கடலூர் மாவட்டம்
உப்பனாறு, பரவனாறு போன்ற நதிகள் இங்கு கடலோடு கூடுவதால் கூடலூர் என்று பெயர்பெற்று அதுவே பின்னர் ‘கடலின் நகரம்’ என்ற பொருளில் கடலூர் என்று அழைக்கப்படலாயிற்று. புகழ்பெற்ற சிதம்பரம் நடராசர் கோயில், பிச்சாவரம் காடுகள் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் கடலூர் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.
கரூர் மாவட்டம்
1995-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கரூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் முக்கிய நகரங்களாக கரூர் மற்றும் குளித்தலை நகரங்கள் அறியப்படுகின்றன.
கன்னியாகுமரி மாவட்டம்
குமரித் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் மார்சல் நேசமணியின் தலைமையில் நடந்த விடுதலை போராட்டத்தின் வெற்றியாக நவம்பர், 1956-ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரித்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறியது. நாகர்கோவில், குளச்சல் உள்ளிட்ட 4 நகராட்சிகளை கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில் ஆகும்.
காஞ்சிபுரம் மாவட்டம்
அறிஞர் அண்ணா பிறந்த இடம், பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைநகர், பட்டுப்புடவை என்று பற்பல விஷயங்களுக்காக காஞ்சிபுரம் மாவட்டம் புகழோடு அறியப்படுகிறது. இந்த மாவட்டத்தில் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட ஆலயங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழ்நாட்டின் 30-வது மாவட்டமாக 2004-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக ஓசூர் நகரம் அறியப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம்
பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் கோயம்புத்தூர் மாவட்டம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த மாவட்டத்தில் ஆழியாறு, சிறுவாணி ஆறு, பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் பாய்கின்றன. இவற்றில் சிறுவாணி ஆற்றின் நீர் உலகிலேயே 2-வது சுவையான நீராக கருதப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், இளையான்குடி ஆகிய 7 வட்டங்களை உள்ளடக்கியது. இவற்றில் காரைக்குடி நகரம் மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாக கருதப்படுகிறது.
சென்னை மாவட்டம்
தமிழகத்தின் தலைநகரம் சென்னையை மையமாக கொண்டு அமையப்பெற்ற சென்னை மாவட்டத்துக்கு என்று தனியாக தலைநகரம் எதுவும் கிடையாது. சென்னை மாவட்டம் மெரினா கடற்கரை, பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில் போன்றவருக்காக புகழ்பெற்றது.
சேலம் மாவட்டம்
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சேலத்திலிருந்து பிரிக்கப்படுவதற்கு முன் தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டமாக சேலம் மாவட்டமே அறியப்பட்டு வந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்கிவரும் மேட்டூர் அணை, புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ்நாட்டின் அரிசிக்கின்னம் என்று அறியப்படும் தஞ்சாவூர் மாவட்டம் சோழர்களின் வரலாற்றைக் கூறும் சரித்திரப் புகழ் வாய்ந்த மாவட்டம். உலகப்புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றுக்காக தஞ்சை மாவட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக திகழ்ந்து வருகிறது.
தர்மபுரி மாவட்டம்
கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் தர்மபுரி மாவட்டம் கோயில்களுக்காகவும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்காகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இவற்றில் சென்றாய பெருமாள் கோயில், ஒகேனக்கல் அருவி ஆகியவை மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டம்
மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு 1985-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இதுதவிர முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இந்த மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம்
திருச்சி மாவட்டம் வடக்கில் சேலம் மாவட்டத்தையும், கிழக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தையும், தெற்கில் மதுரை மாவட்டத்தையும், மேற்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான அணையாக கருதப்படும் கல்லணை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம்
1790-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ல் திருநெல்வேலி மாவட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனியால் உருவாக்கப்பட்டது. தாமிரபரணி ஆறு பாயும் இம்மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் ஆலயம், அகஸ்தியர் அருவி ஆகியவை புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் 2008-ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதன் பிறகு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.
திருவண்ணாமலை மாவட்டம்
1989-ஆண்டு வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை சம்புவரயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. பின்னர் 1996-ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.
திருவள்ளூர் மாவட்டம்
1997-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாக பிரித்தபோது திருவள்ளூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம்
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநதி அவர்களின் சொந்த ஊரான திருக்குவளை, திருவாரூர் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. இந்த மாவட்டம் சோழர்களால் 1-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தியாகராஜஸ்வாமி திருக்கோயிலுக்காக மிகவும் புகழ்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம்
துறைமுக நகரம் என்றும், முத்துக்களின் நகரம் என்றும் சிறப்பித்து கூறப்படும் தூத்துக்குடி நகரத்தை தலைநகரமாக கொண்டு தூத்துக்குடி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில்தான் கட்டபொம்மன் பிறந்த இடமான பாஞ்சாலங்குறிச்சியும், பாரதியார் பிறந்த எட்டயபுரமும் அமைந்திருக்கின்றன.
தேனி மாவட்டம்
மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஜூலை 25, 1996-ஆம் ஆண்டு தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தேனி மாவட்டத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி, போடி மெட்டு ஆகியவை அறியப்படுகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம்
1991-ஆம் ஆண்டு, அக்டோபர் 18-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் தமிழ்நாட்டின் சமூக நல்லிணக்கம் மிகுந்த மாவட்டம் என்று அறியப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம்
1997-ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில், கொல்லிமலை ஆகியவை அறியப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம்
மலைகளின் ராணி ஊட்டியை தலைநகரமாக கொண்டு நீலகிரி மாவட்டம் செயல்பட்டு வருகிறது. ஊட்டியை தவிர குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் நீலகிரி மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம்
ஜனவரி 14, 1974-ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளை பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் முதன்மை சுற்றுலாத் தலங்களாக சித்தன்னவாசல், விராலிமலை ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டம்
1995-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
மதுரை மாவட்டம்
திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன. மதுரை மாவட்டம் மீனாட்சியம்மன் கோயில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, திருப்பரங்குன்றம், திருமலை நாயக்கர் மஹால், பழமுதிர்ச்சோலை ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலம்.
விருதுநகர் மாவட்டம்
தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும், வடமேற்கில் தேனி மாவட்டமும் விருதுநகர் மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களாக சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவை அறியப்படுகின்றன.
விழுப்புரம் மாவட்டம்
1993-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி, அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து விழுப்புரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம்
19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வட ஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே வேலூர் இருந்தது. பின்னர் 1989-ல் வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவரையர் மாவட்டம் (இன்றைய திருவண்ணாமலை), வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு வட ஆற்காடு அம்பேத்கர் மாவட்டம் 1996-ல் வேலூர் மாவட்டம் எனப் பெயரிடப்பட்டது.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

கோனூர்நாடு ஆண்டிப்பட்டி சொன்னது…

கல்லணை தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது...

Blogger இயக்குவது.