அதிகார அந்தப்புரங்களுக்கு அடிமைகளைத் தயாரித்து அனுப்பும் தொழிலகங்களாக மட்டுமே இன்றைய கல்விக்கூடங்கள் இயங்கிவருவதை
வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் விளக்குவதாக அமைந்திருந்தது கல்வியாளரும் சமூக ஆர்வலருமான CMN சலீமின் பேச்சு. பாமரருக்கும் விளங்கும்படியானதும் விளக்கம் நிறைந்ததுமான நீண்ட உரை.
ரியாத் பத்தாவிலுள்ள ரமாத் அரங்கில் வெள்ளிக்கிழமை (04 04 14) அன்று உதயம் தென்னிந்திய கலாச்சார கழகமும் பாலைவனச் சோலை (OASIS) அமைப்பும் இணைந்து நடாத்திய 'கல்வி விழிப்புணர்வு முகாம்' ஒன்றில் தான் மேற்கண்ட உரை நிகழ்த்தப்பட்டது.
முன்னதாக, வெள்ளி மதிய வேலையில் மின்னரட்டையில் வந்த நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவரிடம் 'நான் கவிதை வாசிக்கவென்று ஓரிரு நிமிடங்கள் ஒதுக்குவீர்களா?' என்று விளையாட்டாய் வினவப் போக 'அதற்கென்ன?" என்று ஒதுக்கியே விட்டார்கள் :-).
இறைமறை ஓதப்பட்டு நிகழ்ச்சி தொடங்கிற்று. நாகூர் ஹனீபாவின் 'இறைவனிடம் கையேந்துங்கள்' என்ற என்றும் பசுமையான பாடலை தன் தேன்குரலில் ஒலித்த காயல் பாடகர் ஷேக் அப்துல்காதர் ஏனோ அதை முழுமையாகப் பாடவில்லை. இவ்வமைப்புகளின் ஆஸ்தான பாடகரான ஜாஃபர்சாதிக் நிகழ்ச்சி நெறியாள்கை செய்ததால், பாடாமல் போயிருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
பாடலுக்குப் பிறகு கவிதை கூறும்படி என்னை அழைத்தார்கள். கல்வியின் இன்றியமையாமை குறித்து அருமை நண்பர் அதிரை சபீர் காக்கா எழுதிய ஒரு கவிதையை நினைவிலிருந்தவரைக்கும் - அதை கைவசமிருந்த காகிதத்தில் மாற்றிய வரைக்கும் - பகிர்ந்துகொண்டேன்.
பின்னர் பட்ஜெட் நிறுவன மண்டல மேலாளரும் கல்விப் பணியில் சப்தமின்றி பல நற்காரியங்கள் செய்து வருபருமான குரைஷி அவர்களை வாழ்த்துரை வழங்க அழைத்தார்கள். தேர்ந்த நல்ல ஆங்கிலத்தில் பேசிய குரைஷி சாஹிப், நிகழ்ச்சியின் நோக்கத்தை உணர்ந்து பேசிய சிறுபேச்சு நன்றாக அமைந்திருந்தது. பெரும்பாலும் ஆங்கிலம் அறிந்தவர்களே நிரம்பியிருந்த அவை அதனை நன்கு உள்வாங்கியிருந்தால் நல்ல பலனளிக்கும்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறனும் ஆற்றலும் உண்டு. அவ்வவற்றில் அவரவர்கள் சமுதாயத்திற்கு உதவ வேண்டும் என்பதே குரைஷி சாஹிப் பேசியதின் சாரம்.
பின்னர், சிறப்புப் பேச்சாளர் சி.எம்.என் சலீம் பற்றிய அறிமுகத்தை, 'இலக்கி'யர் ஷாஜஹான் சிறப்பாகச் செய்தார். ஷாஜஹானின் அறிமுகத்திற்குப் பிறகு தனது நீண்ட உரையைத் தொடங்கினார் சி.எம்.என் சலீம்.
கல்வியும் ஊடக விழிப்புணர்வும் தான் ஒரு சமூகத்தின் கண்களாக அமையும் என்ற கருத்தில் தனது உரையைத் தொடங்கிய சலீம், கல்வி என்பது ஒழுக்க விழுமங்களுடன் கூடியதாகவே அமைய வேண்டும்; சமூக நெறிகள் வளரவே உதவிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். 'மெக்காலே' அறிமுகப்படுத்திய 'ஆங்கிலேயக் கல்வி ஒழுக்க விழுமங்களைத் தவிர்த்துத் தகர்ப்பதாகவும், குறுநோக்கு சம்பளக்காரர்களை மட்டுமே 'உற்பத்தி' செய்வதாக ஆழ்ந்த வருத்தம் தொனிக்கக் குறிப்பிட்டார்.
கல்வியிலும் அறிவியலிலும் அன்றைய முஸ்லிம் உலகின் பாக்தாதும் கார்டோபாவும் ஆதிக்கம் செலுத்தியதையும், அப்பாஸிய கலீஃபா ஹாரூன் அல் ரஷீத், மாஃமூன் அல்ரஷீத் ஆகியோர் ஹவுஸ் ஆஃப் விஸ்டம் என்கிற பெரும் ஆய்வுச்சாலையை பாக்தாதில் நிறுவி சமூக முன்னேற்றத்திற்கு வழிகோலியதையும் குறிப்பிட்டார். அண்மையில் பாக்தாத் சூறையாடப்பட்டபோது, அமெரிக்கப் படைகள் முதலில் அழித்தொழித்ததும் ஹவுஸ் ஆஃப் விஸ்டம் என்னும் ஞானச் சாலையைத்தான் என்றார் சலீம்.
அரேபியர்களின் தோளில் அமர்ந்ததாலேயே தான் தனது உயரத்தை எட்டியதாக ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் குறிப்பிட்டதை; கணிதவியலிலும், வானியலிலும் இந்தோ அராபிய பங்களிப்பைச் சிலாகித்துப் பேசினார். ஆர்யபட்டா, சுஷ்ருதா ஆகிய சமஸ்கிருத அறிஞர்களையும் வியந்துரைத்து, அவர்களின் ஆய்வுகளையும் அன்றைய அராபியர்கள் பயன்படுத்தி மேலும் முன்னேற்றமளித்தனர் என்றார் சலீம்.
'உலகளாவிய கல்வியும்; மாணவர்களின் எதிர்காலமும்' என்ற தலைப்பில் உரை இருக்கும் என்று கூறப்பட்டதால், குறிப்பிட்ட சிலவகைப் படிப்புகள் பற்றி எடுத்துரைப்பார் என்று எதிர்பார்த்து என்னுடன் வந்திருந்த நண்பர் ஒருவர் 'உரை மிகவும் பொதுப்படையாக இருக்கிறது' என்று தனக்குத் தோன்றியதை என்னிடம் குறிப்பிட்டார். சல்தா ஹை. அதில் உண்மையில்லாமல் இல்லை என்றாலும், மறு சுழற்சி ஆற்றல் (ரீனிவபிள் எனர்ஜி), இஸ்லாமிய வங்கியியல் போன்ற சில துறைகளில் இருக்கும் அபரிமித வாய்ப்புகளை பேச்சாளர் குறிப்பிடத் தவறவில்லை.
"அடுத்த சில ஆண்டுகளில் இஸ்லாமிய வங்கியியல் துறையில் மட்டுமே 50,000 காலியிடங்கள் உள்ளன" என்றார் அவர். 'நீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு முதல் தொழிற்புரட்சிக்கும் பெட்ரோலும் கணினியும் இரண்டாம் புரட்சிக்கும் வித்திட்டதாகக் கூறிய கல்வியாளர் சலீம் "சூரிய சக்தி ஆற்றல் மூன்றாம் புரட்சியை உருவாக்கும்" என்றார். மின்சாதன கடைகள் மலிந்திருக்கும் அளவுக்கு வருங்காலங்களில் சூரியசக்தித் தகடுகள் விற்பனை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். 'உல்கின் மின் தேவையைக் காட்டிலும் நான்குமடங்கு சூரிய ஆற்றலை சவூதி அரேபியா உற்பத்தி செய்யும் திறனுடையது' என்றார். சலீம் அவர்களின் சில கருத்துகளை நானும் நண்பரும் முன்னதாகவே விவாதித்துக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் சியாம் பிரசாத் முகர்ஜி, சமூகச் சேவையிற் சிறந்த ராஜாராம் மோகன்ராய், இன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரின் ஆரம்பக் கல்வி 'மதரஸா' வகைக் கல்வியே என்பதை நினைவூட்டிய சி.எம்.என் சலீம், 18 ஆம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளரான ஷாஹ் வலியுல்லாஹ் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். ஒழுக்க விழுமங்களுடன் கூடிய கல்விக்கூடங்களைத் தொடங்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இறுதியில், ஷாஜஹான் நன்றியுரையை நன்றுரையாக்கி முடிக்கும்வரை பார்வையாளர்கள் மந்திரம் போட்டது போல அமர்ந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவினை உதயம் மற்றும் பாலைவனச் சோலை (OASIS) அமைப்பினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்புரை ஆற்றிய ஓயசிஸ் தலைவர் ஷேக் தாவூத், மேலும் முன்னிலை வகித்த ஜவஹர் சவரிமுத்து, ஜோஸ், ஆகிய ஓயஸிஸ் உறுப்பினர்களும், நிகழ்ச்சி நெறியாள்கையை சிறப்பாகச் செய்த ஜாஃபர் சாதிக், அறிமுக உரை செய்த லக்கி ஷாஜஹான், இந்தியப் பன்னாட்டுப் பள்ளி பேரவை சார்பாக பொன்னாடைப் போர்த்திய ஷெரீஃப், கேடயம் தயாரித்தளித்த ரஃபீக் போன்ற உதயம் உறுப்பினர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
இவ்விழா வெற்றிகரமாக, சேலம் சிக்கந்தர் என்று அழைக்கப்பெறும், உதயம் தலைவர் சிக்கந்தர் குறிப்பிடத்தக்கவர். விழா ஏற்பாடுகளில் நுழைமதி முதற்கொண்டு புரவலர் அனுசரணை பெற்றது வரை பம்பரமாகச் சுழன்று வெற்றிகரமாக விழாவை நடத்தி முடித்த பாங்கு மிகவும் பாராட்டுக்குரியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக