கேரள மாநிலம் கொச்சி சிறந்த வர்த்தக நகரமாக திகழ்கிறது. இங்கு துறைமுகம், விமானநிலையம் போன்றவை இருப்பதால் தொழில் தொடங்குபவர்களுக்கு மிகவும் சிறந்த நகரமாக உள்ளது.
எனவே கொச்சியில் நவீன வசதிகளுடன் ‘ஸ்மார்ட் சிட்டி’ அமைக்க வேண்டும் என்பது தொழில் அதிபர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. கேரள மக்களின் இந்த கனவு திட்டம் தற்போது நனவாக தொடங்கி உள்ளது.
இதற்கான தொடக்க விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் துபாய் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேலும் கேரள முதல்–மந்திரி உம்மன் சாண்டி, மத்திய மந்திரி ராஜீவ்பிரபாத், கேரள மந்திரிகள், தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் வருகிற 2020–ல் நிறைவு பெறும் என்றும் 9 ஆயிரம் தொழிற்கூடங்கள் இங்கு செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவிலான 21 பெரிய கட்டுமான நிறுவனங்கள் சேர்ந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற உள்ளன. முதல் கட்டமாக 1500 கோடியில் இந்த பணிகள் தொடங்கி உள்ளன.
விழாவில் பங்கேற்ற முதல்–மந்திரி உம்மன் சாண்டி பேசும்போது கூறியதாவது:–
உலக நாடுகள் இனி கேரளாவை நோக்கி வரும். அதற்கான வாய்பை இந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ ஏற்படுத்தி கொடுக்கும். இதன் மூலம் கேரளாவில் தொழில் வளம் பெருகும். கேரள மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றார்.
மந்திரி குஞ்சாலிகுட்டி பேசும்போது கேரள மக்களின் 14 ஆண்டு கனவு இன்று நனவாகி உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக