அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுப் பணிகள் குழு வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 34 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.2.3 லட்சம் கோடி) அளவுக்கு இந்தியா ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்துள்ளது. இதே காலகட்டத்தில் சவுதி அரேபியா 93.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு கொள்முதல் செய்தது.
வளரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தங்களைக் கணக்கிட்டு திரட்டப்பட்ட இப்புள்ளிவிவரங்களின் படி, ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் சவுதி அரேபியா முதலிடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது.
2008-15 காலகட்டத்தில் இந்தியாவில் ராணுவ நவீனமயமாக்கல் முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாகவே இந்தியாவின் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் அளவு அதிகரித்ததாகத் தெரிகிறது.
ரஷ்யாவின் முதன்மையான வாடிக்கையாளராக கருதப்படும் இந்தியா அண்மைக் காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து தளவாடங்களை வாங்கி வருகிறது. 2004-ம் ஆண்டில் இஸ்ரேலிடம் இருந்து ஃபால்கான் முன்னெச்சரிக்கை ராணுவ விமானங்கள் வாங்கப்பட்டன.
2005-ம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட ஏராளமான தளவாடங்கள் வாங்கப்பட்டன. 2008-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து சி130ஜே சரக்கு விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக