Breaking News
recent

சென்னை விமான நிலையத்தை கட்டினார்களா ஒட்டினார்களா?


சென்னை விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்கள் கட்டப்பட்டு, கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவின்போது அதை பற்றி வானளாவ  புகழ்ந்தார்கள் அதிகாரிகள். எல்லாம் மே 12 வரையில்தான். அன்றுதான் உள்நாட்டு முனையத்தில் முதல் முறையாக கூரையின் ஒரு பகுதி கீழே விழுந்தது.

சரியாக பொருந்தாததால் அது விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால், அதன்பின்னர் பல முறை கூரை இடிவதும், கண்ணாடிகள் விழுவதுமாக உள்ளது. புதிய முனையங்களை கட்டினார்களா, ஒட்டினார்களா என்று தெரியவில்லை. எந்த அதிகாரி வந்தாலும் விசாரணை நடத்தப்படும்; விசாரணைக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது; மேல் விசாரணையில் உண்மை தெரியவரும் என்று மாறி, மாறி பேசுகிறார்கள். மேற்கூரைகள் இடிவது மட்டும் இன்னமும் நிற்கவில்லை.


உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள முதல் நுழைவு வாயில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி சுவர் நேற்று உடைந்துள்ளது. அது எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததால், பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் வந்து அதை அகற்றியுள்ளனர்.

இப்போது மீண்டும் அதிகாரிகள், புதிய கலரில், புதிய காரணத்தை சொல்லலாம். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி காரணங்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள் என்று தெரியவில்லை.மத்திய அரசு கட்டுமானங்கள் என்றால், அவை மிக உறுதியானவை. காலாகாலத்துக்கும் அழியாமல் நினைவுச் சின்னங்களாக இருக்கக் கூடியவை என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. சமீபகாலங்களில் இந்த நம்பிக்கையே கேள்விக்குறியாக மாறிவிடுமோ என்ற நிலைதான் உள்ளது. உள்கட்டமைப்பு விஷயங்கள் என்பது பொதுமக்களுடன் சம்பந்தப்பட்டவை. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்படுபவை. இதில் எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது. தவறு எங்கிருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ஆங்காங்கேதான் இடிந்து விழுகின்றன. ஒட்டுமொத்தத்தில் கட்டுமானம் தரமாக உள்ளது என்று மீண்டும் சப்பைக்கட்டு கட்டாமல், முழுவதுமாகவே அதை ஆராய்ந்து, எங்கெங்கு பிரச்னைகள் உள்ளன என்பதை நிபுணர்கள் குழுவை கொண்டு கண்டறிய வேண்டும். அதையும் உடனடியாக செய்து பொதுமக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.பயணிகள் தலையில் கூரைகள் இடிந்து விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் முன்பு, இதை விமான நிலைய ஆணையம் மேற்கொண்டால், விலைமதிப்பில்லாத உயிர்களாவது மிஞ்சும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.