Breaking News
recent

10 கோடி ஆண்டுகளுக்கு முன் கடல் நிலப்பகுதியாக மாறியது பெரம்பலூர் வரலாறு புத்தகமாக வருகிறது..


பெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு முழுமையான ஆதாரங்களுடன் மிகப் பெரிய புத்தகமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டு அருகேயுள்ள மாவட்ட மையநூலகத்தில் 46வது தேசிய நூலக வாரவிழா 14ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை சார்பாக 3 நாள் தொல்லியல் கல்வெட்டு கண்காட்சி நேற்று தொடங்கியது.


இதற்கான தொடக்க விழாவிற்கு மாவட்ட நூலக அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். நூலக வாசகர் வட்டத் தலைவர் அசன் முகமது, துணைத் தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரியலூர் அரசு கல்லூரி முதல்வர் தியாகராஜன் பேசியதாவது :

10 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் கடலாக இருந்து பிறகு நிலப்பகுதியாக மாறியது. இதனால் கடலில் வாழ்ந்த நத்தைகள், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், கடலோரப் பகுதியில் இருந்த மரங்கள் ஆகியவற்றின் பாசில்கள் எனப்படும் படிமங்கள் கிடைத்துள்ளன.


பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய கற்காலம், புதிய கற்காலம், நுண்கருவிகள் காலம், இரும்பு காலம் எனப்படும் பெருங்கற்காலம் ஆகிய காலங்களைச் சேர்ந்த கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இவை 10 லட்சம்ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிபி 300 வரையுள்ள காலங்களைச் சேர்ந்தவையாகும்.பெரம்பலூர், பெரும்பலூர் என்றே கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாறாக பெரும் புலியூர் என்றோ, இப்பகுதியில் புலிகள் வாழ்ந்ததாகவோ எந்த கல்வெட்டிலும், நூல்களிலும் தெரிவிக்கப்படவில்லை.

இப்பகுதியில் நொச்சி மரங்கள் அதிகமிருந்த பகுதி நொச்சியம் என்றும், தொண்டமாந்துறை, திருமாந்துறை, திருவாளந்துறை என ஆற்றோரங்களில் இருந்த கிராமங்கள் துறைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து குலசேகரபாண் டியன், 3ம் குலோந்துங்க சோழன், மராட்டிய சிவாஜி, விஜயநகரப் பேரரசு, போசளர், 3ம் இராஜராஜ சோழன், திருமலை நாயக்கர் காலத்து கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

 பீலி என்றால் மயிலைக் குறிக்கும். இங்குள்ள பீல்வாடி கிராமம் மயில்கள் அதிகம் வாழ்ந்த பகுதியென்பதால் பீல்வாடி எனப்படுகிறது. சிறிய அகழியால் சூழப்பட்ட கிராமம் சித்தளி எனவும், பெரியஅகழி கொண்டபகுதி பேரளி எனவும் மருவி அழைக்கப்படுகிறது.

பெரம்பலூர் நகரம், கடல்சூழ்ந்தபகுதி, ரஞ்சன்குடிகோட்டை, கோயில்கள், ஆறுகள், மலைகள், ஊர்கள், இங்கு கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள், அவற்றின் காலங்கள் என பெரம்பலூர் மாவட்டம் குறித்த வரலாறு மிகப்பெரிய புத்தகமாக முழு மையான ஆதாரங்களு டன் தயாராகி வருகிறது எனத் தெரிவித்தார். 

விழாவில் அரசுக் கல்லூரி துறைத் தலைவர் ரவிச்சந்திரன், பேராசிரியர் தமிழ்மாறன், நல்நூலகர்கள் சேகர், கோபால், பன்னீர்செல்வம், விஜயகுமார், நூலகர்கள் நாகராணி, ராம்குமார், சுரேஷ், மகாலெட்சுமி, அனுஷியா, சித்ரா, கோமதி, சோபனா, சிவகாமசுந்தரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.அரிய பொருட்கள் 


கண்காட்சியில், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய நத்தை, நட்சத்திரமீன், கடல்குதிரை, டைனோசர் முட்டை ஆகியவற்றின் பாசில்களும், பழைய, புதிய கற்காலங்களில் பயன்படுத்திய கற்கருவிகள், சோழர்கால, சங்ககால, ஆங்கிலேயர்கால காசுகள், சோழர், பாண்டியர், நாயக்கர் கால கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள் ளன.
VKALATHURONE

VKALATHURONE

Related Posts:

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.