Breaking News
recent

தலையில் தொப்பி,நெற்றியில் பட்டை,கழுத்தில் சிலுவை–மதநல்லிணக்க மனிதன் சன்முகம்!


நெற்றியில் விபூதி பட்டை, கழுத்தில் சிலுவைச் சங்கிலி, தலையில் குல்லா என்று வித்தியாசமான தோற்றத்தில் நடமாடும் அந்த அரசுப் பேருந்து நடத்துநர் பவானி பகுதியில் மிகப்பிரபலம். ’மதம் என்பது  சக மனிதர்களிடம் அன்பு காட்டி வாழ்வதே’ என்பதை தன்னுடைய தோற்றத்திலும், செயலிலும் தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கும் அவரது பெயர் சண்முகம். 
பவானி பேருந்து நிலைய பணிமனையில் இருந்து பவானி டூ கள்ளிப்பட்டி செல்லும் அரசு பேருந்தில் நடத்துநர் ஆக பணிபுரியும் சண்முகத்திடம் அவரது தோற்றம் பற்றியும், அதற்கான காரணத்தையும் கேட்டறிந்தோம். 
“உங்களை பற்றி?”
நான் அரசு போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராக பணிபுரிகிறேன். பணிக்கு செல்லும் போதும், வீட்டில் இருந்து வெளியில் செல்லும் போதும் இப்படித்தான் செல்கிறேன். அப்பா நடேசன் சுதந்திர போராட்டத் தியாகி. விடுதலை விடுதலை என்று அப்பா போராட்டக்களத்திற்குச் சென்றதால்  வீட்டில் நித்தமும் வறுமை. 
அதனால் ஆறாம் வகுப்பிற்கு மேல் கல்வியைத் தொடர முடியவில்லை. ஆனால், இந்த சமூகத்தைப் பார்க்கப் பார்க்க பல விஷயங்கள் தோணும். அதை எல்லாம் மற்றவர்களிடமும் சொல்ல ஆரம்பித்து அது மாதிரி இருக்கணும்னு சொல்லுவேன். புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த போது காரல் மார்க்ஸ் எழுதியதை முதன் முறையாக படித்தேன். 
அதன் மூலமாக கம்யூனிச கொள்கைகளில் ஓர் ஈர்ப்பு வந்தது. மேலும் படிக்க படிக்க நிறைய கற்றுக்கொண்டேன். பல சமயங்களில் இக்கால கல்வியை கற்காததை எண்ணி பெருமைப்படுவேன். அப்படி நான் படித்திருந்தால் இன்று இப்படி இல்லாமல் எங்கோ இயந்திரத்தைப் போல யாரிடமோ வேலை பார்த்திருப்பேன். இன்று நான் யோசிக்கக் காரணம் இந்த புத்தகங்கள்” 
“எப்போதிருந்து, எதற்காக இந்த மாதிரியான தோற்றம்?” 
“1996-ம் ஆண்டிலிருந்து இந்த தோற்றத்தைக் கடைபிடிக்க ஆரம்பித்தேன். அப்போது நடத்துநராக பணிக்குச் சேர்ந்த சமயம். அதுவும் வாரம் ஒருநாள் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த மாதிரி இருந்தேன் . பிறகு மேலதிகாரிக்கு யாரோ புகார் அளிக்க அவர் என்னிடம் ‘இது போல நடந்துகொள்ள கூடாது, பிறரை புண்படுத்துவது போல உள்ளது இதுபோல் இனி நடந்துகொண்டால் தங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். 
பிறகு நான் ஒரு விளக்கக் கடிதம் எழுதினேன். அதில், ”நான் எனது உழைப்பை கொடுத்துதான் உங்களிடம் வேலை வாங்குகிறேன். என் உடலை கொடுத்து அல்ல. தனி ஒருவர், தான் விருப்பப்பட்ட மதச்சின்னம் அணிய அனுமதி உள்ளபோது நான் செய்வதை எப்படி தவறென்பீர்கள்?” என்று கேட்டேன். அதன் பிறகு வாரத்தில் ஏழு நாட்களும் எங்கு சென்றாலும் எப்போதும் இப்படியேதான் இருக்கிறேன்”  
சண்முகம் “பிறர் உங்களை வித்தியாசமாக பார்ப்பதில்லையா?
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பார்ப்பார்கள். வித்தியாசமாக பார்க்கிறவங்க பலரும் அவர்களாகவே நான் மத நல்லிணக்கத்துக்காக இப்படி இருப்பதாக நினைத்துக் கொள்வதுண்டு. 
ஒருசிலர் என்கிட்ட நேரடியாகவே அதைக் கேட்டுருவாங்க. அவங்ககிட்ட என்னுடைய கொள்கைகளை எடுத்துரைப்பேன். பிறருக்கு தீங்கு ஏற்படாமல் ஏதாவது ஒரு நல்ல கருத்த நாம பேசுவது மூலமாகவோ, இல்ல நம்மள பார்த்தவுடனேவோ அவங்க மனதில் தோன்றினா அது நல்லதுதானே?
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பிரிந்திருப்பதற்காக இந்தச் சமுதாயத்தை  நான்தான் வேறுபடுத்திப் பார்க்கணும். மதங்கள் ஒருபோதும் நம்மை இணைப்பது இல்லை. கர்நாடகாவிலும் இந்துக்கள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலும் இந்துக்கள் தான் இருக்கிறார்கள். 
பிறகு ஏன் காவிரியை தரமாட்டேங்குறாங்க? இந்த மதங்கள் எல்லாம் பிற மதங்களுடன் சண்டை போட்டு அரசியல் நடத்தவும் மனிதர்களை பிரித்து வைக்கவும் மட்டுமே உதவுகின்றன என்பது என் எண்ணம்” 
இவரது மகன் திருமணத்தை  நடத்திய விதம் ஆச்சர்யப்பட வைக்கும். அதை அவரே சொல்கிறார் கேட்போம் .
“படிக்க வைப்பது அரசாங்கத்தின் கடமை. மருத்துவமும் அரசாங்கம் இலவசமாக தருகிறது. ஆனாலும், இந்த லஞ்சம் ஊழலுக்கு காரணம் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தணும் அப்டிங்கறதுதான். 
கல்யாணத்துக்கு வீண் செலவு எதுவும் செய்யாமல், என்னுடைய மகன் திருமணம் எளிமையாக முடிந்தது. இங்க நல்ல நேரம், கெட்ட நேரம் அப்படினு சொல்லி நிறைய மூட நம்பிக்கை இருக்கு. 
அதுக்காக அந்த நாளில் சரியாக ராகு காலத்தில், சாதி மறுப்புத் திருமணமாக நடத்தினோம். வந்தவர்களுக்கு, குச்சிக்கிழங்கு, பொரிகடலை போன்றவற்றுடன் இருவகை சுண்டல்,பேரீச்சை மற்றும் தேநீர் போன்றவை அளிக்கப்பட்டன. 
மேலும் திருமணத்துக்கு பிறர் படித்த பழைய புத்தகங்கள் மட்டுமே அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் என்று அழைப்பிதழிலேயே அச்சிட்டு கொடுத்தோம். மேலும் இது திருமணமாக அல்லாமல் இருமண ஒப்பந்த விழாவாக நடந்தது.  என் மகன் என்னுடைய அனைத்து செயல்களுக்கும் உறுதுணையாக இருக்கிறான் . அதுவே எனக்கு மிகப்பெரிய பலம்.
”எதிர்காலத்திற்கு ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறீர்களா?”   
“இப்போதான் மருத்துவர்கள் தினத்துக்காக வாழ்த்துமடல் அடிச்சு அவர்களிடம் கொடுத்து, நன்றி தெரிவித்தேன். இன்னும் ஐந்து மாதங்களில் அரசுப்பணியில் இருந்து ஓய்வு. பிறகு ஆட்டோ ஓட்டுவேன். பேருந்து பயணிகளிடம் வெளிப்படுத்திய எனது கொள்கைகள் இனி ஆட்டோவில் சவாரி செய்பவர்களிடமும் வெளிப்படுத்துவேன்” என்கிறார் இந்த ம(னி)த நல்லிணக்க மனிதர் சண்முகம்.
மனிதம் தழைத்தோங்கும் நமது நாட்டில், மத ரீதியான மோதல்கள் அடியோடு குறைந்து, நல்ல கருத்துகளும் நல்ல கொள்கைகளும் யார் மனதையும் புண்படுத்தாமல் பரப்பப்பட்டால் நல்லதுதான்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.