Breaking News
recent

ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து? பொதுமக்கள் கலக்கம்.!


ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ஆதார் அட்டை பெறாதவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் 2 கோடி ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2005 ல் வழங்கபட்ட ரேஷன் கார்டு கடந்த 2009 உடன் காலாவதி ஆன நிலையில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால், இதற்கு பதிலாக உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2012ல் ரூ.300 கோடி செலவில் நவீன வடிவிலான ரேஷன் கார்டு (ஸ்மார்ட் கார்டு) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதன் மூலம் போலி ரேஷன் கார்டு வழங்கப்படுவதை தடுக்க முடியும்  என்று அரசு நம்பியது. 

இதற்காக கடந்த 2014ல் அக்டோபர் மாதத்தில் டெண்டர் விடப்பட்டு இதற்கான பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 

ஆதார்  எண்ணை அடிப்படையாக கொண்டு கண் கருவிழி, கை ரேகையை பதிவு செய்து ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானிக்கப்பட்டது. 

ஆனால், ஆதார் எண் அட்டை பதிவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. 

மாறாக அந்த தனியார் நிறுவனம் புதிய மென்பொருள் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்க தீர்மானித்தது. இந்த நிலையில், உள்தாள் ஒட்டிய ரேஷன் கார்டு வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

 கடந்த 2005ல் வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரே கார்டை பயன்படுத்தி வருவதால் கிழிந்த நிலையில் உள்ளது. 

இதனால், நடப்பாண்டில் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் மீண்டும் ஆதார் எண்ணை இணைத்து  ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 கேஸ் சிலிண்டர் மற்றும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு பணி முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கி உள்ளது. 

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதில், ரேஷன்கார்டுக்கான வழக்கமான விவரங்களுடன், ஆதார் எண், வங்கி கணக்கு எண், தொலைபேசி எண் விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.

ஆதார் எண் இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்தாகிவிடும் என்ற தகவலால், ஆதார் அட்டை பெறாதவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து உணவு வழங்கல் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:போலி ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தில் ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 

ஆதார் எண் விவரங்களை ரேஷன்கார்டுகளில் இணைக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

நுகர்வோர்கள் விண்ணப்ப படிங்களை பூர்த்தி செய்து ஊழியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்னர் இந்த படிவங்களில் உள்ள விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை அடையாளம் காண முடியும் என்றார். 

ரேஷன்கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த புதிய கணக்கெடுப்பின் மூலம் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுமா என கேட்டதற்கு, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான எந்த அடிப்படை பணிகளும் இப்போது துவங்கவில்லை. 

ஆதார் எண் இல்லாவிட்டாலும் ரேஷன் கார்டு ரத்தாகாது. இதனால் பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்றும் அதிகாரி தெரிவித்தார். 

விண்ணப்பத்தில் வங்கி கணக்கு எண் கேட்டிருப்பதால், கேஸ் சிலிண்டரைப்போல ரேஷன் பொருளுக்கும் நேரடி மானியம் வழங்கவே இந்த  பணிகள் துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஏற்கனவே, வங்கி கணக்கு எண் கொடுக்காதவர்களுக்கு கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

எனவே, ரேஷன் கார்டிலும் வங்கி கணக்கு எண் வழங்காவிட்டால் மானியம் கிடைக்காத நிலை ஏற்படும். 

ரேஷன் பொருட்களை ஏழைகளே அதிகம் வாங்குகின்றனர். இவர்கள் வங்கி கணக்கு துவங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் ரேஷன் பொருள் வாங்கும் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.