Breaking News
recent

திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் மேலும் 2 விமானங்கள் இயக்கப்படும் விமான நிலைய புதிய இயக்குனர் தகவல்.!


திருச்சியில் இருந்து சென்னைக்கு வருகிற 28–ந் தேதி முதல் தினமும் மேலும் 2 விமானங்கள் இயக்கப்படும்’’ என்று திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குனர் குணசேகரன் கூறினார்.

புதிய இயக்குனர் 

திருச்சி விமான நிலையத்தின் இயக்குனராக இருந்த நெகி கோவா விமான நிலையத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் போபால் விமான நிலைய இயக்குனராக இருந்த கே.குணசேகரன் திருச்சி விமான நிலைய இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த சனிக்கிழமை திருச்சி விமான நிலையத்தின் புதிய இயக்குனராக பொறுப்பேற்ற குணசேகரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

6,500 டன் சரக்கு ஏற்றுமதி 

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு ஏற்றுமதி செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. 2015–16–ம் நிதியாண்டில் 6 ஆயிரம் டன் சரக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் வரை இலக்கை தாண்டி 6 ஆயிரத்து 75 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் இது 6 ஆயிரத்து 500 டன் ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014–15–ம் நிதியாண்டில் 4,973 டன் சரக்குகள் தான் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் இருந்து காய்கறி, பழங்கள், பூக்கள், மீன், துணி வகைகள் மற்றும் தோல் பொருட்கள் தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இவை சிங்கப்பூர், மற்றும் அரபு நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஏற்றுமதி ஆகிறது. சரக்கு ஏற்றுமதியை இன்னும் அதிகப்படுத்த இந்திய தொழில் கூட்டமைப்பு, டிராவல்ஸ் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருடன் மே மாதத்திற்கு பின்னர் பேச இருக்கிறேன்.

12 லட்சம் பயணிகள் 

சரக்கு ஏற்றுமதி மட்டுமின்றி பயணிகள் போக்குவரத்தும் திருச்சி விமான நிலையத்தில் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை 1.2 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் ஆகும்), அதாவது 12 லட்சம் பயணிகள் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தி உள்ளனர்.

திருச்சியில் இருந்து மும்பை, டெல்லிக்கு விமானங்கள் இயக்குவது பற்றி விமான நிலைய ஆணையமும், விமான நிறுவனங்களும் தான் முடிவு செய்து அறிவிக்கவேண்டும்.

தினமும் 5 விமானங்கள் 

திருச்சியில் இருந்து சென்னைக்கு தற்போது தினமும் 3 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 28–ந்தேதி விமான பயண கோடைகால பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அன்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு தினமும் கூடுதலாக 2 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதன் மூலம் சென்னைக்கு தினமும் 5 விமானங்கள் இயக்கப்படும்.

மேலும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதலாக 2 புதிய விமானங்களை இயக்குவதற்கும் தனியார் விமான நிறுவனம் அனுமதி கேட்டு உள்ளது.

ஓடுபாதை நீட்டிப்பு 

திருச்சி விமான நிலைய ஓடுபாதையின் (ரன்வே) நீளம் தற்போது 8,100 அடியாக உள்ளது. இதனை 12,500 அடியாக நீட்டிப்பு செய்வதற்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்தி கொடுத்தால் தான் அதற்கான பணிகளை தொடங்க முடியும்.

ஓடுபாதை நீட்டிப்பு செய்யப்பட்டால் பெரிய ரக பயணிகள் விமானங்கள் மட்டும் இன்றி, பிரத்யேக சரக்கு விமானங்களும் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்க முடியும். இதற்காக பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இடம் உள்பட சுமார் 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியது உள்ளது.

ரூ.860 கோடியில் விரிவாக்கம் 

திருச்சி விமான நிலையத்தில் உள்ள புதிய முனையத்தை ரூ.860 கோடியில் விரிவாக்கம் செய்வதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டு தொழில்நுட்ப ஆலோசனை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு, விமான நிலையங்களின் ஆணைய ஒப்புதல் பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும்.

கலைக்கூடம் 

திருச்சி விமான நிலையத்தில் கலைக்கூடம் (ஆர்ட் கேலரி) விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் விமான பயணிகள் புகைப்பிடிப்பதற்கு வசதியாக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என வைத்த கோரிக்கை அடிப்படையில் பயணிகள் வருகை பகுதியிலும், புறப்பாடு பகுதியிலும் தனித்தனியாக இதற்கான வசதி செய்து கொடுக்கப்பட உள்ளது. உணவக வசதிகளும் செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி– சென்னை விமான சேவை புதிய கால அட்டவணை

திருச்சி விமான நிலையத்தை பொறுத்தவரை 2 கால அட்டவணை பின்பற்றப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்கால அட்டவணையும், ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை கோடை கால அட்டவணையும் வெளியிடப்படும். குளிர்காலம், மற்றும் கோடை கால அட்டவணைகள் வெளியிடும்போது விமானங்கள் புறப்படும் நேரத்திலும் சிறிய மாறுதல்கள் செய்யப்படும். 

திருச்சியில் இருந்து சென்னைக்கு தற்போது மதியம் 12 மணி, பிற்பகல் 3.10 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. கோடை கால புதிய அட்டவணை படி தினமும் மேலும் 2 விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விமானங்கள் தினமும் காலை 7.45 மணிக்கு ஒன்றும், மாலை 5.50 மணிக்கு ஒன்றும் திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.