நெல்லை மாவட்டம் ஏர்வாடி காட்டுப்பகுதியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்றிரவு தலை, கை, கால்களில் பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்கள் இது குறித்து ஏர்வாடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சண்முகம் (நாங்குநேரி), பாலாஜி (வள்ளியூர்) ஆகியோர் தலைமையில் ஏர்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஏர்வாடி 3–வது தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது மகனும், ஆட்டோ டிரைவருமான காஜா மைதீன் (வயது 25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொல்லப்பட்டவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்ல முயன்றனர்.
அப்போது கொலையுண்ட காஜா மைதீனின் உறவினர்கள் 50–க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து கொலையாளிகளை உடனே கைது செய்தால் மட்டுமே உடலை எடுத்து செல்ல அனுமதிப்போம் எனக்கூறி உடலை எடுக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். மேலும் உடலை எடுக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது எஸ்.பி.விக்ரமன் கொலையாளிகளை உடனே கைது செய்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து காஜாமைதீனின் உறவினர்கள் சமாதானம் அடைந்ததால், உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காஜாமைதீன் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. நேற்று இரவு சுமார் 7 மணிக்கு வழக்கம் போல காஜாமைதீன் ஏர்வாடி ஆட்டோ நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காஜாமைதீனை சவாரிக்கு அழைத்துள்ளார். அவரும் அந்த பெண்ணை அழைத்து கொண்டு சென்றார். ஏர்வாடியை அடுத்துள்ள காட்டுபகுதி அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்த போது அங்கு மறைந்திருந்த கும்பல் காஜாமைதீனின் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியது.
பின்பு அவரை ஆட்டோவில் இருந்து வெளியே இழுத்து போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் காஜாமைதீன் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
காஜா மைதீன் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெட்டி கொலை செய்ததா? அல்லது ஆட்டோ டிரைவர்களுக்குள் சவாரி ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டு அதில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு களக்காடு அருகே உள்ள பொத்தையடியை சேர்ந்த பா.ஜனதா ஒன்றிய செயலாளரும், ஆட்டோ டிரைவருமான முத்துக்குமார் என்பவரை 4 பேர் சேர்ந்து சவாரிக்கு அழைத்து செல்வது போல நடித்து ஏர்வாடி– நாங்குநேரி சாலையில் உள்ள ஆலங்குளம் பகுதியில் வெட்டிகொல்ல முயன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை, மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பழிக்கு பழியாக மர்ம கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்ததா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலையாளிகள் குறித்து துப்பு துலக்கவும், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை கொலையாளிகளை பிடிக்க நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கு சென்று உள்ளனர்.
இதற்கிடையே பொத்தையடி பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காஜாமைதீன் கொலை சம்பவத்தை கண்டித்தும், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஏர்வாடியில் கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பஜார் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஏர்வாடியில் தொடர்ந்து 2–வது நாளாக பதற்றம் நிலவி வருவதால் 2 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நகர் பகுதி முழுவதும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காஜாமைதீனின் உடல் வைக்கப்பட்டுள்ள நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்ட வண்ணம் இருப்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக