Breaking News
recent

வாழ்நாள் ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்! – உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை!


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கொலை வழக்கு ஒன்றில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கொல்கத்தாவைச் சேர்ந்த 4 தண்டனைக் குற்றவாளிகள், தங்களின் நீண்ட நாள் சிறைவாசத்தை சுட்டிக்காட்டி, தங்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். 
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தண்டனை குறைப்பு, முன்கூட்டி விடுதலை போன்றவற்றில் தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கான அதிகாரங்கள் மாநில அரசுக்கு தான் உள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுக்கு உள்ளது என்பது நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதேப்போன்று கடந்த அக்டோபரில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று 17 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் சிறைக் கைதி வீரபாரதியின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சிறைவிதிகளின் படி ஆயுள் கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யப்பட உரிமை உண்டு என உத்தரவிட்டு, இதுதொடர்பான மனுக்களை பரிசீலிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
 மேலும், அறியாமையால் நீதிமன்றத்தில் வழக்கு தொடராமல் இருக்கும் பிற ஆயுள் கைதிகளின் மனுக்களை நிராகரித்து பிறப்பித்த உத்தரவை உள்துறை செயலர் மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நீதிமன்ற உத்தரவுகள் நீண்ட நாள் ஆயுள் சிறைக் கைதிகளை சட்டப்படி விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.
ஆகவே, தமிழக சிறைகளில் நீண்ட நாட்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளான பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதால், அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும். மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய முன்வர வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சிறைவாசிகள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அதே நேரத்தில், வாழ்நாள் ஆயுள் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், தமிழக அரசு அவர்களின் விடுதலையை தொடர்ந்து நிராகரித்து வருகின்றது. தமிழக அரசின் இந்நடவடிக்கை வருத்தமளிப்பதாக உள்ளது.
ஆகவே, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வாசம் அனுபவித்து வரும் அனைத்து ஆயுள் கைதிகளையும் விடுதலை செய்ய முன்வர வேண்டும். இனியும் தொடர்ந்து இழுத்தடிப்புகளை மேற்கொள்ளாமல் விடுதலை நடவடிக்கையை விரைவாக தொடங்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.