Breaking News
recent

சுபுஹுக்கு பாங்கு சொல்ல, இஸ்ரேலில் தடை..?


பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி மூலம் தொழுகைக்கு அழைப்பதை (அதான்) தடை செய்யும் இஸ்ரேலிய சட்டமூலம் ஒன்று, யூத மதத்தலங்களுக்கு விலக்களிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தின் ஆரம்ப வடிவின்படி, யூத மதத்தலங்களில் வெள்ளிக்கிழமை சூரியோதயத்தின்போது ஒலிபெருக்கியில் விடுக்கும் யூத தின அறிவிப்பும் தடை செய்யப்படும் வாய்ப்பு இருந்தது. 

எனினும் இதற்கு தீவிர ஓர்தடொக்ஸ் யூதர் ஒருவரான சுகாதார அமைச்சர் யாகொவ் லிட்ஸ்மான் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இதனால் இந்த சட்டமூலத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் இரவு 11 மணி தொடக்கம் காலை 7 மணி வரையான காலத்தில் ஒலிபெருக்கியில் ஒலி எழுப்ப தடை விதிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம்களின் அதிகாலை தொழுகைக்கான அழைப்புக்கு தடை ஏற்படும் நிலை உள்ளது.

இந்த சட்டமூலம் ஆரம்பக்கட்ட வாக்கெடுப்பிற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் என சபாநாயகர் யூலி எடல்ஸ்டைன் சார்பில் பேசவல்ல ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது சட்டமாக அமுலுக்கு வரும் முன்னர் பாராளுமன்றத்தில் மேலும் வாக்கெடுப்புகளுக்கு முகம்கொடுக்க வேண்டும். இந்த சட்டமூலத்திற்கு முஸ்லிம் மற்றும் அரபுலகில் கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த சட்டம் இஸ்ரேல் ஆக்கிரமித்த கிழக்கு ஜெரூசலம் மற்றும் இஸ்ரேலிய பகுதிகளில் இருக்கும் பள்ளிவாசல்களில் அமுலுக்கு வரும். எனினும் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா வளாகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.