Breaking News
recent

அமீரகத்தில் மேம்படுத்தப்பட்ட சம்பள பாதுகாப்புத் திட்டம்.!


அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சம்பள பாதுகாப்புத் திட்டத்தின் (WPS) கீழ் ஊழியர்கள், தொழிலாளர்கள் என பெரும்பான்மையினர் தங்களது சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்று வருகின்றனர்

 என்றாலும் அனைவரும் இச்சட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட முழு சம்பள பாதுகாப்புச் சட்டத்தை அமீரக மனிதவளத்துறை அமைச்சகம் இன்று திங்கள் முதல் அறிமுகம் செய்துள்ளது.

மேம்படுத்தப்பட்ட இச்சட்டத்தின் மூலம் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் முழு மாதாந்திர சம்பளத்தையும் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பெற முடியும். 

100 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் குறிப்பிட்ட சம்பள தினத்திலிருந்து அதிகபட்சம் 10 நாட்கள் தாமதத்திற்குள் சம்பளத்தை வழங்கிவிட வேண்டும், தவறும் நிறுவனங்களுக்கு புதிய விசாக்கள் வழங்கப்படுவது 16வது நாளிலிருந்து நிறுத்தப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட சம்பளத் தேதியிலிருந்து 1 மாதத்திற்கு மேல் சம்பளம் வழங்காமல் இழுத்தடிக்கும் நிறுவனங்கள் குறித்து உடனடியாக நீதித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளுக்கு மேல் நடவடிக்கைகளுக்காக தெரியப்படுத்தப்படுவதுடன் அந்த குழுமத்தின் பிற நிறுவனங்களின் செயல்பாடுகளும் சேர்த்து முடக்கப்படுவதுடன் புதிய வியாபார அனுமதிகளும் ரத்து செய்யப்படும்.

இதற்கு மேலும் சம்பளம் வழங்க தாமதம் செய்யும் நிறுவனங்களின் வங்கி உத்தரவாத தொகை (Bank Guarantee) திரும்ப பெறப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதுடன் மூன்றாம் தர நிறுவனமாகவும் தரமிழக்கச் செய்யப்படும் மேலும் ஊழியர்கள் பிற நிறுவனங்களில் வேலைக்கு சேரவும் அனுமதிக்கப்படுவர்.

60 நாட்களுக்கு மேல் சம்பளம் வழங்காமல் இருக்கும் நிறுவனங்களின் மீது ஏற்கனவே நடைமுறையிலுள்ள அபராதங்களுக்கு மேல் ஒவ்வொரு தொழிலாளர்களின் நிலுவையின் மீதும் 5000 திர்ஹத்திலிருந்து அதிகபட்சம் 50000 திர்ஹத்திற்கு மிகாமல் அபராதம் வசூலிக்கப்படும்.

ஒரு மாத தாமதத்திற்குள் சம்பளத்தை முழுமையாக வழங்கிவிடும் நிறுவனத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டு புதிய பெர்மிட்டுகளும் வழங்கப்படும் என்றாலும் 60 நாட்களில் தாமத சம்பளம் தரும் நிறுவனத்திற்கு 2 மாத தடை விதிக்கப்படும். இதற்கு மேலும் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கு எதிராகவும் இரண்டு மடங்குகளாக தடை விதிக்கப்படும்.

இன்னொருபுறம், 100 தொழிலாளர்களுக்கு குறைவாகவுள்ள நிறுவனங்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களின்படி தண்டனையும் கோர்ட் தீர்ப்பின்படி அபராதமும் விதிக்கப்படும்.

 மேலும் இந்நிறுவனங்கள் சம்பளத்தை 60 நாட்கள் வரை தாமதித்தலோ, இதே குற்றத்தை ஒரே வருடத்தில் பலமுறை திருப்பித் திருப்பி செய்தாலோ அந்றிறுவனங்கள் 100 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களுக்குரிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவர்.

மேலும், இதுவரை சம்பள பாதுகாப்புத் திட்டத்தில் (Wage Protection System - WPS) பதியாத எந்த நிறுவனத்துடனும் அவர்கள் பதிந்து கொள்ளும் வரை அமைச்சகம் எத்தகைய பரிவர்த்தனையும் செய்யாது எனவும் அறிவித்துள்ளது.

Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.