Breaking News
recent

அமீரகத்திலிருந்து 48 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பும் இந்தியர் ( படங்கள் ).!


இது தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை குறிப்பல்ல, அவரோடு பின்னிப்பிணைந்து விட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னிருந்த அமீரக வரலாற்றை, கலாச்சாரத்தை, வளர்ச்சியை சற்றே எட்டிப்பார்க்கும் காலப்பதிவு இது. விரைவான கால ஓட்டத்தை அறிந்து கொள்ள கடைசி வரை படிக்கவும்.

V.P. ஜார்ஜ் 20 வயது இளைஞனாக அமீரகத்திற்குள் 1968 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தபோது ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரு நாடே உருவாகியிருக்கவில்லை.

இவர் அபுதாபிக்கு வந்த 4 வது வருடத்தில் தான் அன்றைய அபுதாபி மன்னர் ஷேக் ஜாயித் பின் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் துபை மன்னர் ஷேக் ராஷித் அல் மக்தூம் ஆகியோரின் தீவிர முயற்சியால் 1971 ஆம் ஆண்டு டிசம்பர்; 2 ஆம் நாள் தனித்தனி நாடுகளாக செயல்பட்ட 7 எமிரேட்டுகள் ஒன்றிணைந்து 'ஐக்கிய அரபு அமீரகம்' என ஒரே நாடாக மாறியது.

அன்றைய அபுதாபி என்ற தனி நாட்டிற்காக இந்தியாவில் தூதரகம் கூட உருவாகியிருக்கவில்லை மாறாக அபுதாபிக்கான தூதரக வேலைகளை அன்றைய மெட்ராஸில் செயல்பட்ட பிரிட்டீஷ் துணைத்தூதரகமே (Madras British Consulate - Truce State) ஒப்பந்த அடிப்படையில் அபுதாபியின் தூதரகப்பணிகளை செய்து வந்துள்ளது.

மெட்ராஸ் பிரிட்டீஷ் துணைத் தூதரகத்தில் 1968 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி அபுதாபிக்கான 1 வருட விசா பெற்றுக்கொண்டு 'பம்பாய்' வழியாக 'சிர்தானா' என்ற கப்பலில் 1 வாரம் பயணித்து துபையை வந்தடைந்துள்ளார்.

துபையிலிருந்து அபுதாபி செல்ல 'இன்று போல் அன்று பறக்கும் சாலைகள் இல்லை' நாம் கச்சா ரோடு என்றழைக்கும் கரடுமுரடான மண் சாலையிலேயே காரில் பயணித்துள்ளார்.

சூடான ஜூலை மாத இறுதியில் வந்திறங்கியவரை காலையில் கழுதை பூட்டிய வண்டியில் தண்ணீர் விற்பவரின் குரலே எழுப்பியுள்ளது ஆனாலும் நண்பரின் அறிவுரைப்படி காசு கொடுத்து தண்ணீரை வாங்காமல் அதிகாலையில் குழாயில் மெலிதாக ஒரு சில மணிநேரமே வரும் தண்ணீரை பல நாட்கள் பல மணிநேரங்கள் அரைத்தூக்கத்தில் காத்திருந்து பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்தியுள்ளார்.

அன்றைக்கு பல வீடுகள் ஆஸ்பெஸ்டாஸ் கூறை வேயப்பட்ட வீடுகளே மேலும் நாளொன்றுக்கு 3 முதல் 4 மணிநேரமே மின்சாரம் வரும் மற்ற நேரங்களில் மிகுந்த சத்தமெழுப்பும் பழைய மாடல் குளிர்ச்சாதனங்கள் ஓய்வில் தான் இருக்கும்.

1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி 'ஈஸ்டர்ன் பேங்க்' என்று அறியப்பட்ட இன்றைய 'ஸ்டாண்டர்டு சாட்டர்டு பேங்கில்' கிளார்க்காக பணியில் சேர்ந்து, காசாளராக, முதன்மை காசளராக, விற்பனை பிரிவு அதிகாரி என உயர்ந்து கடைசியில் தனது 60 வது வயதில் 40 ஆண்டு சேவைக்குப்பின் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் நாள் அதே வங்கியிலிருந்தே ஓய்வு பெற்றுள்ளார்.

தனது அனுபவத்தில் எத்தனையோ நாடுகளுக்கு பயணித்துள்ள ஜார்ஜ் அமீரகம் போன்று வேறு எந்த நாடும் இவ்வளவு விரைவான வளர்ச்சியை பெறவில்லை என சிலாகிக்கின்றார். (ஆனால் அமீரகத்திற்கு முன் வளர ஆரம்பித்த நம்ம இந்தியா இன்னும் வளரும் நாடுகளின் பட்டியலிலேயே நிரந்தரமாக தங்கிவிட்டது)

அமீரகத்தில் 1970 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக வங்கியில் கால்குலேட்டர் பயன்பாட்டுக்கு வந்தது மேலும் 1980 ஆம் ஆண்டு முதலே கம்ப்யூட்டர்கள் வங்கியில் பெரும் வரவேற்புடன் பயன்படுத்தப்பட்டன.

வங்கிப்பணி ஓய்வுக்குப்பின் தனியார் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணியாற்றியவர் இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று நவம்பரில் இந்தியாவுக்கு திரும்பச் செல்கிறார் ஆனாலும் அவருடைய 3 பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என அனைவரும் அமீரகத்தில் பெரும் பதவிகளில் உள்ளனர்.

உங்களுடைய பார்வைக்காக அவருடைய பழைய பாஸ்போர்ட்கள், மெட்ராஸ் பிரிட்டீஷ் துணைத் தூதரகம் வழங்கிய அபுதாபி விசா, இவரை குறித்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி மற்றும் பல...










Source: Gulf News
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.