Breaking News
recent

'ஸ்மார்ட்’ கார்டுகளாக மாறும் ரேஷன் அட்டைகள்..! தொடங்கியது அரசு அதிரடி.!


தமிழகத்தில்நியாயவிலைக்கடைகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் விதத்தில் ‘ஸ்மார்ட்’ அட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. 

டிசம்பர்மாதத்துக்குள்அனைவருக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 98 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றை ‘ஸ்மார்ட்’ அட்டையாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. 

தகுதி உடையவர்களுக்கு மட்டும் சரியான முறையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சென்றடைவதற்கு வசதியாக ஸ்மார்ட் அட்டைகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

பல்வேறு முறைகேடுகளைத் தடுக்கும் விதத்தில் ‘ஸ்மார்ட்’ அட்டைகள் கொண்டு வரப்படுகின்றன. 

‘ஸ்மார்ட்’ அட்டையை பயன்படுத்தி பொருள் வாங்கியதும், குடும்பத்தினரின் செல்போனுக்கு அது சம்பந்தமான எஸ்.எம்.எஸ். வந்துவிடும். அதில் பொருளின் எடையளவு போன்ற விபரங்கள் இருக்கும். 

அதோடு, போலி அட்டைகளை ஒழித்து விடலாம். தகுதியுடைய ஒவ்வொருவரும் விட்டு விடப்படாமல் ‘ஸ்மார்ட்’ அட்டையை பெற்றுவிட முடியும். இதற்காக குடும்ப அட்டை விபரங்களுடன் ஆதார் எண்களை இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 முதல் கட்டமாக 13 மாவட்டங்களில் ஆதார் எண் குடும்பஅட்டைதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகள் பற்றி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதல் கட்டமாக 13 மாவட்டங்களில் நடக்கும் பணி விரைவில் முடிவடைய உள்ளது. 

அதன் பின்னர் சென்னை உட்பட மீதமுள்ள மாவட்டங்களில் இந்தப் பணிகள் தொடங்கும். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் சென்னையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாக உள்தாள் ஒட்டி குடும்ப அட்டையின் கால அளவை ஒவ்வொரு ஆண்டாக நீட்டித்து வருகிறோம். ஆனால் இந்த முறை குடும்ப அட்டையின் கால அளவை அந்த முறையில் நீட்டிக்க வாய்ப்பு இருக்காது.

ஏனென்றால், ஜனவரி மாதம் முதல் அனைவருமே ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தித்தான் குடும்ப பொருட்களை வாங்கும் நிலை நடைமுறைக்கு வந்துவிடும். 

அந்த அட்டையை பயன்படுத்துவதற்கான எந்திரமும் அனைத்து நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்படும்" என்று கூறினார்.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இந்த புதிய விதிமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.