Breaking News
recent

ஆதார் எண் தராவிட்டால்சமையல் எரிவாயு மானியம் நிறுத்தம்.!


தமிழகம் உள்பட நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காதவர்களுக்கு மானியத் தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐ.ஓ.சி.), ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் (எச்பிசிஎல்), பாரத் பெட்ரோலிய நிறுவனம் (பிபிசிஎல்) ஆகியவை சமையல் எரிவாயு மானியத் தொகையை நிறுத்தி வைக்கும் இந்த அதிரடி நடவடிக்கையை ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.

குறுந்தகவல் சேவை மூலம்...: இது குறித்து எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் நுகர்வோரின் செல்லிடப்பேசியில் குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. 

""தாங்கள் ஆதார் எண்ணை சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடம் சமர்ப்பிக்காமல் இருப்பதால், சமையல் எரிவாயுக்கான மானியத் தொகை நிறுத்தி வைக்கப்படுகிறது. 

மானியத் தொகையை தங்களது வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்த தங்களது ஆதார் எண்ணை உடனடியாகச் சமர்ப்பிக்கவும்'' என்று குறுந்தகவல் சேவை அனுப்பப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் பி.தட்சிணாமூர்த்தி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்டத் தலைவர் சி.பால் பர்னாபஸ் ஆகியோர் கூறியதாவது:

""சமையல் எரிவாயு மானியத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால் மானியத் தொகை நிறுத்தி வைக்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் குறுந்தகவல் அனுப்புவது கடும் கண்டனத்துக்குரியது.

ஆதார் எண் பெறுவதில் பிரச்னைகள்: ஏனெனில் ஆதார் எண்ணைப் பெறுவதில் சமையல் எரிவாயு நுகர்வோருக்குப் பல பிரச்னைகள் உள்ளன. 

ஆதார் அட்டை (எண்) பெற ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளோருக்கு அவர்களது செல்லிடப்பேசியில் தகவல் வரும் நிலையில், பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமல் இருக்க வேண்டியது அவசியம்; மேலும் ஆதார் அட்டைக்கு மனு செய்தோர் செல்லிடப்பேசி எண்ணை மாற்றியிருந்தாலும் பிரச்னைதான்.

மேலும் லட்சக்கணக்கானோர் இன்னும் ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்காத நிலை நீடிக்கிறது. ஆதார் எண் பெற்றவர்களில் பலர், அதற்குரிய படிவத்தைப் பூர்த்தி செய்து வங்கியிலும் சமையல் எரிவாயு விநியோகஸ்தரிடமும் இன்னும் அளிக்காத நிலையும் உள்ளது.

நிறுத்திவைப்பு கூடாது : ஆதார் எண்ணைப் பெறுவதில் இன்னும் பிரச்னை நீடிப்பதால் சமையல் எரிவாயு நுகர்வோர் அனைவரும் ஆதார் எண்ணைப் பெற்று வங்கியில் இணைக்கும் வரை மானியத் தொகையை நிறுத்திவைக்கக் கூடாது.

 சமையல் எரிவாயு மானியத் தொகை நிறுத்திவைப்பு குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) அனுப்புவதை இனி தொடராமல், வங்கிக் கணக்கை அளித்திருக்கும் நுகர்வோருக்கு மானியத் தொகையை எண்ணெய் நிறுவனங்கள் அளிப்பது அவசியம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

செப்டம்பர் 30 வரை கெடு

சமையல் எரிவாயு மானியத் தொகையைப் பெற எரிவாயு விநியோகஸ்தர், வங்கியில் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என ஐ.ஓ.சி., எச்.பி.சி.எல். உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் கெடு விதித்துள்ளன.

ஜூலை 1-ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்துவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி, ஆதார் எண்ணை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) அனுப்பி வருகின்றன.

வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்கும் நுகர்வோருக்கு, அவர்கள் பெற்ற சமையல் எரிவாயு உருளைகளுக்கு உரிய மானியத் தொகை வரும் அக்டோபர் மாதம் முதல் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்காவிட்டால், சமையல் எரிவாயு மானியத் தொகை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.