Breaking News
recent

பொய் சொல்லி தன் சிறுநீரகத்தை தாய்க்காக தியாகம் செய்த மகன் இம்ரான் நஜீப்.!


சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு, சிறுநீரகத்தை தானம் அளிப்பதற்காக மகன் சாமர்த்தியமாக கூறிய பொய் நெகிழ்ச்சிச் சம்பவமாக பேசப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இம்ரான் நஜீப் (34) என்பவர், தன் ஆறு குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். 

இவரது தாய் ஜைனப் பேகத்துக்கு, திடீரென சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நாள்தோறும் அவருக்கு டயாலசிஸ் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிறுநீரகத்தின் இயக்கம் 25 சதவீதமாக குறைந்ததால், உடனடியாக அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். 

இதையடுத்து, மகன் இம்ரான் நஜீப் தனது சிறுநீரகத்தை அளிக்க முன் வந்துள்ளார். ஆனால், தாய் ஜைனப் பேகம் ஏற்க மறுத்துவிட்டார்.

எனினும் அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்பில், ஏற்கெனவே தனது சிறுநீரகத்தை விற்றுவிட்டதாகவும், தற்போது இணையதளத்தில் அது ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் இம்ரான் தெரிவித்துள்ளார். 

மேலும் ஜைனப் பேகத்துக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாததை அனுகூலமாக மாற்றிக் கொண்ட அவர், கூகுள் இணையதளத்துக்கு சென்று, சிறுநீரக படத்தை எடுத்து காண்பித்து இது தான் தனது சிறுநீரகம் என்றும், இதை சீனாவை சேர்ந்த ஒரு நபர் பணம் கொடுத்து வாங்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் “முன்பின் அறியாதவருக்கு அளிப்பதை விட, எனக்கே அந்த சிறுநீரகத்தை அளித்துவிடு” என தாய் ஜைனப் பேகம் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

தற்போது தாயும், மகனும் மெல்ல குணமடைந்து வருவதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தாயின் உயிரை காப்பாற்றுவதற்காக இம்ரான் தெரிவித்த சாமர்த்தியமான பொய் தற்போது உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.