Breaking News
recent

வேப்பந்தட்டை அருகே சிறுமிக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்.!


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஒரு வாலிபருக்கும் இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சமயபுரம் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

 இதுகுறித்து வருவாய்த்துறையினர் வாயிலாக மாவட்ட சமூக நலத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மலையாளப்பட்டி பகுதிக்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி தமீமுன்னிசா நேற்று நேரில் சென்று விசாரணை நடத்தினார். 

18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் எடுத்து கூறி இன்று நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.

பின்னர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டு, குறுகிய கால தங்கும் மகளிர் விடுதியில் சேர்க்கப்பட்டார். 

இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 481 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றும், தங்கள் பகுதியில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாக 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு 224122 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட சமூக நல அதிகாரி தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.