Breaking News
recent

திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை பயணிகள் முற்றுகை.!


விமானம் தாமதத்தால் திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை முற்றுகையிட்டு பயணிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.


இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன் விமானம் தினமும் 2 சேவைகளை இயக்கி வருகிறது. 

மதியம் 2-30 மணிக்கு திருச்சி வரும் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பிற்பகல் 3-30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

நேற்று மதியம் கொழும்பு விமானத்தில் செல்வதற்கு வந்த 137 பயணிகள் பலத்த சோதனைக்கு பின் பயணிகள் தங்கும் அறையில் காத்திருந்தனர்.

அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொழும்பில் விமானம் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மாலை 4-30மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பயணிகள் 2 மணி நேரம் பயணிகள் காத்திருப்பு அறையில் காத்திருந்தனர். ஆனால் விமானம் மாலை 5 மணி ஆகியும் வராததால் பயணிகள் ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

பின்னர் இரவு 10-55 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் வரும் என தெரிவித்தனர். 

இதில் கோபமடைந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் ஏர்லைன்ஸ் மற்றும் டெர்மினல் மேலாளர் அறையை முற்றுகையிட்டு தங்கள் பயணத்தை ரத்து செய்து கொள்வதாக தெரிவித்தனர்.

இருந்த போதும் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது எங்களுக்கு மாற்று ஏற்பாடு கூட செய்யாமல், பயணிகள் தங்கும் அறையிலேயே தங்க வைத்ததாக கூறி ஆதங்கப்பட்டனர். 

இதில் 50 பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்து விட்டு பணத்தை திரும்ப பெற்று சென்றனர். மீத முள்ள பயணிகள் அறையில் காத்திருந்தனர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விமானம் இரவு 10-55 மணிக்கு வந்து 11-55 மணிக்கு 87 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது. 8 மணி நேர தாமதத்தால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.