Breaking News
recent

திருச்சியில் பெரும் பரபரப்பு ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு : 167 பயணிகள் உயிர் தப்பினர்.!


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு திருச்சிக்கு வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் நள்ளிரவு 12.20 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட தயாரானது. 

சோதனைகள் முடிந்து 167 பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் கிளம்ப ஆயத்தமாகி ரன்வேயில் ஓடியது. ஆனால், குறிப்பிட்ட  வேகத்துக்குமேல் விமானம் செல்லவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை அறிந்து கட்டுப்பாட்டு அறைக்கும், விமான நிறுவன உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து விமானத்தை மீண்டும் ஏரோ பிரிட்ஜ்க்கு (பயணிகள் ஏறி, இறங்கும் இடம்) கொண்டு வரும்படி விமானிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதால் அவர் ஏரோ பிரிட்ஜ் கொண்டு வந்து பயணிகளை இறக்கி விட்டார். 

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்த பிறகுதான் விமானம் கிளம்பும் என அறிவிக்கப்பட்டது. 

இதனால், தங்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யும்படி பயணிகள் வலியுறுத்தினர். உடனடியாக, அருகில் உள்ள ஓட்டலில் 40 பேர் தங்கவைக்கப்பட்டனர். 

பின்னர், அதிகாலை 5 மணிக்கு வேறு சில ஓட்டல்களில் மற்ற பயணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்தநிலையில், கோலாலம்பூரில் தொழில் நுட்ப குழுவினர் நேற்று காலை 8.30 மணிக்கு திருச்சி வந்து, விமானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதற்கிடையில் இந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் நேற்று மாலை சென்ற விமானத்திலும், மாலை செல்ல வேண்டிய பயணிகள் இரவு விமானத்திலும் புறப்பட்டு சென்றனர். 

இரவு செல்ல வேண்டிய பயணிகள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்து இன்று அதிகாலை புறப்படும் விமானத்தில் செல்லவிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

விமானி சரியான நேரத்தில் தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.