Breaking News
recent

மூன்று முறை "தலாக்' எனக் கூறி விவாகரத்து செய்யும் முறையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.!


முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்' எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், இந்த விவகாரத்தில் உடனடியாக எந்த முடிவுக்கும் வர இயலாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இதையடுத்து இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரித்தது. இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

இதனிடையே, தலாக் நடைமுறையை ஆதரித்தும், எதிர்த்தும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட சமூகத்தின் தனிப்பட்ட வழக்கங்களை மாற்றக் கூடாது என்று அதை ஆதரித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக இதுதொடர்பான வழக்கொன்றை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், "தலாக்' நடைமுறையால் அந்த சமூகத்தினரின் அடிப்படை உரிமைகள் பாதிக்காது என்று தீர்ப்பளித்தது.

அந்த உத்தரவை எதிர்த்தும், "தலாக்' முறையை ரத்து செய்யக் கோரியும் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

அவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி ஏ.எம். கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.

அந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், "தனிப்பட்ட வழக்கமாக இருந்தாலும், அது பெரும்பாலான மக்களுடன் தொடர்புடைய விஷயம் என்பதால், அதை அரசியல் சாசன விதிகளின் படி ஆய்வுக்குட்படுத்த வேண்டியது அவசியமாகிறது' என்றனர்.

அதே நேரத்தில், இந்த விவகாரம் குறித்து உடனடியாக எந்தவிதமான முடிவுக்கும் வர இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், "தலாக்' நடைமுறை குறித்து இரு தரப்பினரும் தெரிவிக்கும் கருத்துகளை கேட்டறிவது முக்கியம் என்றனர்.

இந்த வழக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்று கூறிய நீதிபதிகள் இதுதொடர்பாக வெளியான முந்தைய தீர்ப்பில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா? என்பது குறித்து ஆராய வேண்டும் என்றனர்.

அதன் பிறகே இந்த வழக்கை 5 அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மாற்றுவது தொடர்பாக பரிசீலிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 6-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.