Breaking News
recent

நோன்பின் மாண்புகள்: பூரண விடுதலையைத் தேடி.!


இந்த புனித ரமலானில் இறைத் தொடர்பு பெற முயற்சிப்போம், நன்மைகளை அடைவோம்.

புனித ரமலானின் இறுதி பத்து நாட்கள்  இனிதே ஆரம்பித்து விட்டன. இஃதிகாப் (பள்ளிவாசலில் தங்கி) இருத்தல், நரக விடுதலை-பாவமன்னிப்பு தேடுதல், புனித லைலத்துல் கத்ர் இரவைத்தேடுதல், ஜகாத், ஸதகா கொடுத்தல், குர்ஆன் ஓதி முடித்தல் என அனைத்து விதமான நல் அமல்களுக்கு நாம் தயாராக வேண்டியதிருக்கிறது.

நபிகளார் நவின்றார்கள்: ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ர் எனும் புனித இரவை தேடுங்கள் (நூல்: புகாரி).
ரமலானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் புனித இரவைத் தேடுங்கள் (நூல்:புகாரி).

இறுதிப்பத்து நாட்கள் வந்து விட்டால் நபிகளார் தமது ஆடையை இடுப்பில் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள்; தம் குடும்பத்தார்களை எழுப்பி விடுவார்கள் (நூல்: புகாரி).

நபிகளார் ரமலானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் (பள்ளிவாசலில் தங்குபவர்களாக) இருந்தார்கள். நபிகளார் தாம் மரணித்த வருடத்தில் இறுதி இருபது நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள். (நூல்:புகாரி)

இப்படியாக அனைத்து வகையான நல் அமல்களுக்கும் நபிமொழிகள் பல நமக்கு நல்வழி காட்டுகின்றன. முயற்சியும், பயிற்சியும் தரும் ஒரு அற்புதமான மாதம் தான் இந்த புனித ரமலான் மாதம். 

அல்லாஹ் கூறுகிறான் : நிச்சயமாக மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததைத் தவிர வேறெதுவும் அவனுக்கு கிடைப்பதில்லை, நிச்சயமாக அவனது முயற்சி(யின் பலன்) விரைவில் அவனுக்கு காண்பிக்கப்படும். (திருக்குர்ஆன் 53:39,40)

எனவே நமது முயற்சியின் பலன் என்ன என்பதைப் பற்றி ரமலான் நமக்கு நிச்சயம் காட்டித்தருகிறது. மனத்தெளிவு, அமல்களில் ஆர்வம், ஒற்றுமைப்பண்பு, உதவிசெய்தல் என பன்முகத் தன்மைகள் நமக்குள் குடிகொண்டு, தீய பழக்கங்கள் நம்மை விட்டு விலகி நமது வாழ்க்கையை மேம்படுத்துகிறது.

மேற்கண்ட அமல்களை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள் அவை யாவுமே நற்பண்புகளை இனிதே நமக்கு போதிப்பவை. ஒரு சராசரி நோன்பாளி நிச்சயம் நல்லொழுக்கம் உள்ளவனாகத்தான் மாற்றம் பெறுவான். 

அதற்காகத்தான் அவன் பள்ளிவாசலில் பொதுமக்களின் தொடர்பு இல்லாமல் இறைத் தொடர்பில் இணைந்திருக்கிறான். அதனால் தான் நபிகளார் நீங்கள் பள்ளிக்குள் நுழையும் போதெல்லாம் இஃதிகாப் நிய்யத் வைத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.


 பள்ளிவாசலில் தங்கியிருப்பவர் நிச்சயம் அல்லாஹ்வின் நேரடித்தொடர்பில் இருக் கிறார். ஒருவர் இறைத்தொடர்பைப் பெற்றுவிட்டால், அவருக்கு அதைவிட வேறு சிறந்த பாக்கியம் எதுவும் இருக்காது. 

எனவே இந்த புனித ரமலானில் இறைத் தொடர்பு பெற முயற்சிப்போம், நன்மைகளை அடைவோம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.