Breaking News
recent

நீங்கள் கொடுத்தனுப்பும் ஸ்கூல் லஞ்ச் உண்மையில் தரமானதா?.!


ஸ்கூல் போற என் பிள்ளைக்கு பார்த்து பார்த்து குக் பண்ணி கொடுக்கிறேன்" என்று பெருமிதம் கலந்த சலிப்புடன் சொல்லும் பெற்றோர் கொடுத்தனுப்பும் உணவுகள், சிற்றுண்டிகள், தின்பண்டங்கள், பானங்கள் எல்லாம் சரியானவையா... அவை எந்தவித கெடுதலும் விளைவிக்காதவையா என்பது குறித்து கடலூரைச் சேர்ந்த இயற்கை வைத்தியர் அன்னமேரி பாட்டி சொல்கிறார்.

'`என் குழந்தைக்கு நான் எப்போதும் இயற்கை உணவுகளையே விரும்பி கொடுப்பேன்' என்று கூறிக்கொண்டு ஆப்பிள் பழத்தையும், கொய்யாப்பழத்தையும் பொடிப்பொடியாக நறுக்கியோ அல்லது வில்லை போட்டோ அனுப்பி வைக்கும் பெற்றோரா நீங்கள்? 

அப்படி செய்வது உங்கள் குழந்தையின் உடல்நலனை பாதிக்குமே தவிர பயன்தராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆம்... பல மணி நேரங்கள் வெட்டி வைக்கப்படும் பழங்கள் அல்லது காய்கறிகள் தனது தன்மையை இழந்துவிடுவதோடு கிருமிகளை உள்ளிழுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 அதுமட்டுமல்ல, சிலநேரங்களில் அவை கெட்டுப்போகவும் வாய்ப்புள்ளது. இதை அறியாமல் உண்ணும் உங்கள் குழந்தைக்கு வயிற்று உபாதைகளோ உடல்நலக்கோளாறோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

எனவே பழங்கள் மட்டுமின்றி இயற்கைப்பிரியர் என்று சொல்லிக்கொண்டு கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை துண்டு துண்டாக வெட்டிப்போட்டு அதனுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறையும், கொஞ்சம் மிளகுத்தூளையும் தூவி வாய்க்கு ருசியாக அனுப்பி வைக்காதீர்கள். 

அது எதிர்வினை புரிந்தால் உங்கள் குழந்தையின் உடல்நலன் பாதிக்க வாய்ப்புள்ளது. இவற்றை சில மணி நேரங்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும் என்னும்போது, மணிக்கணக்கில் வைத்திருந்தால் என்னவாகும் என்பதை யோசியுங்கள்
.
அவன் எப்போதும் பாலும் பழமும் கலந்துதான் சாப்பிடுவான் என்று சொல்லிக்கொண்டு இரண்டையும் கலந்து அனுப்பும் பெற்றோரா நீங்கள்? 

ஏதோ ஒரு சூழலில் அவை கெட்டுப்போக நேரிடும்போது அவற்றை சாப்பிடும் உங்கள் குழந்தை அதன் வீரியம் தெரியாமல் சாப்பிடுவதால் என்ன ஆகும்? யோசித்துப்பாருங்கள்.

" என் குழந்தைக்கு நான்வெஜ்னா ரொம்ப இஷ்டம், நான்வெஜ் இல்லைன்னா அன்னைக்கி ஒரு முட்டையாவது கொடுத்து அனுப்பிருவேன்" ன்று பெருமை பேசுபவரா நீங்கள்?  

அசைவ உணவுகளை கொடுத்து அனுப்பும்போது சில நேரங்களில் அவை நொதித்துப்போகவோ, கெட்டுப்போகவோ நேரலாம். மேலும் அது பல், தொண்டையில் சிக்கிக்கொண்டு தேவையற்ற பிரச்னையை ஏற்படுத்தலாம். 

இதேபோல் பால், தயிர் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பாமல் இருப்பது நல்லது. அவை செரிமானம் ஆகாமலோ அல்லது அவை கெட்டுப்போகும் பட்சத்தில் அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவோ வாய்ப்பிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

பொதுவாக தயிர் சாதத்துடன் முட்டை கொடுத்தனுப்பாதீர்கள். இரண்டுமே செரிக்க அதிக நேரமாகும்.

காரம் அதிகமான, இனிப்பு அதிகமான, உப்பு அதிகமான உணவுகள் எதையும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பாதீர்கள். அவை வயிற்று உபாதைகளை ஏற்படுத்தி வாந்தி-பேதியை உண்டாக்கி பெரிய சிக்கலில் கொண்டுபோய் விட நேரிடும். 

வாயுவை உண்டாக்கும் கிழங்கு வகைகள், பயறு வகைகள் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பாமல் இருப்பது நல்லது. இதேபோல் சப்பாத்தி, பூரி, பரோட்டா, நூடுல்ஸ் போன்ற உணவுகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

 ஏனென்றால் இவை செரிமானம் ஆகாமல் வயிற்றுவலியை உண்டாக்கவோ, பேதியாகவோ நேரலாம். 

எனவே மேலும் இதுபோன்ற இறுகலான உணவுகளை உண்ணும்போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

எண்ணெயில் பொரித்த உணவுகள், கிழங்கு வகைகள், சிப்ஸ் வகைகள், நொறுக்குத்தீனிகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் போன்றவற்றையும் குழந்தைகளுக்கு தராமல் இருப்பது நல்லது.

மேலே சொல்லப்பட்ட பெரும்பாலான உணவுகள் குழந்தைகளுக்கு உடல்பருமன், வயிற்றுக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" என்ற பாட்டி,  நமக்காக என்ன மதிரியான உணவுகளை கொடுத்தனுப்ப வேண்டும் என்பதையும் சொன்னார்.

'' எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம் உள்ளிட்ட ஆவியில் வேக வைக்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புவது நல்லது. மேலும் கேழ்வரகு, சோளம், தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சமைத்து கொடுப்பது நல்லது. 

அதுமட்டுமல்லாமல் சிறுதானியங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிட கொடுப்பது நல்லது. பழங்கள் என்று எடுத்துக்கொண்டால் வாழைப்பழம், ஆப்பிள், திராட்சை, சப்போட்டா தோலோடு உரிக்காமல், நறுக்காமல் தினம் ஒன்றாக கொடுத்து அனுப்பலாம். 

தக்காளி சாதம், புளி சாதம், வெஜிடபிள் சாதம் என்று வெரைட்டி சாதங்களும் கொடுத்தனுப்பலாம். எந்தவித கெடுதலும் ஏற்படாது" என்றார் பாட்டி கனிவாக.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.