Breaking News
recent

குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்: அறிமுக வீடியோ.!


வானிலை அறிக்கை, போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்சரிக்கைகளை அளிப்பதுடன் நாள்காட்டியாகவும், நமது குரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றுவதுடன் நமது வாழ்நாளின் பொன்னான நிமிடங்களை பயனுள்ளதாக மாற்றும் சிறிய அளவிலான ’கூகுள் ஹோம்’ என்ற கம்ப்யூட்டர் சேவகனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

காலையில் நாம் உறக்கம் கலைந்து எழுந்தவுடன் புத்துணர்ச்சி அளிக்க இசைக்க வேண்டிய இசை, அது எத்தனை அறைகளில் உள்ள ஸ்பீக்கர்களில் ஒலிக்க வேண்டும் என்ற அளவு, தூங்கும் குழந்தைகளை எழுப்ப வேண்டிய நேரம், முன்பதிவு செய்யப்பட்ட விமானம் புறப்படுவதில் ஏற்பட்ட தாமதம், வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை, அவற்றில் பூமிக்கு வெகு அருகாமையில் உள்ள நட்சத்திரம் எது? என்ற குறிப்பு ஆகியவற்றை நமது குரலின் கட்டளையை வைத்தே இந்த ’கூகுள் ஹோம்’ புரிந்துகொண்டு நொடிப்பொழுதில் பதில் அளிக்கிறது.


அதுமட்டுமின்றி, பிள்ளைகளின் படிப்பிலும் ஆசானாகவும் திகழும் ’கூகுள் ஹோம்’, பிறமொழிசார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன் அன்றைய தினத்தில் வகுப்பில் என்னென்ன பாடங்கள் நடக்கும்? என்பது உள்ளிட்ட புள்ளிவிபரங்களையும் விரல் நுனியில் தகவலாக வைத்துகொண்டு செயலாற்றுகிறது. நமது சார்பில் சில தகவல்களை பிறரது கைபேசிகளுக்கு மெஸேஜ் ஆகவும் இது அனுப்பி வைக்கிறது.

வீட்டின் எந்த இடத்திலும் இடம்பெறும் வகையில் கையடக்க அளவிலும், வெவ்வேறு வண்ணங்களிலும் வெளியாகியுள்ள இந்த ’கூகுள் ஹோம்’ மனிதர்களின் குரல்சார்ந்த பத்தாண்டு ஆராய்ச்சிகளின் பலனாக உருவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்தியரான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர் பிச்சை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ’கூகுள் ஹோம்’ கம்ப்யூட்டரை மென்மேலும் தரமுயர்த்தும் ஆய்வுகளில் கூகுள் நிறுவனம் தொடர்ந்து ஈடுபடும் என இதன் அறிமுக விழாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்திய சந்தைகளில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ’கூகுள் ஹோம்’ கம்ப்யூட்டரின் விலை சுமார் 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, பரபரப்பான விற்பனையில் இருக்கும் ‘அமேசான் எக்கோ’ என்ற படைப்புக்கு ’கூகுள் ஹோம்’
வர்த்தக ரீதியாக பெரும் சவாலாக இருக்கும் என தெரிகிறது.

கூகுள் ஹோமின் செயல்பாட்டின் சிறப்பம்சங்களைக் காண..,


VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.