Breaking News
recent

பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்.!


ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம்.

 கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம்.

 சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.

ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. 

காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் நின்றுக்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அவ்வாகனத்தின் உரிமையாளர் ஹோட்டலிலிருந்து தனது மூட்டைமுடிச்சுகளுடன் சாகவாசமாக வெளியே வந்தார்.

அவரது குழந்தைகளோ அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. நேரம் செல்லச் செல்ல வாடகை வாகனத்திலிருந்த அரபி பொறுமையிழந்து வாகனத்தை எடுக்குமாறு ஹாரனை அழுத்தி ஒலி எழுப்பினார். 

உடனே, அவருடன் சண்டை போட துணிந்துவிட்டார் முன்னால் நிறுத்தியிருந்த வாகனத்தின் சொந்தக்காரரான அரபி. இவர்களின் சண்டையை வேடிக்கைப் பார்க்க பலரும் அங்கே கூடிவிட்டனர்.

இது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், நமது வாழ்க்கையில் இதைப்போல் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். பிறரின் பொறுமையை சோதிப்பதே பலருடைய வழக்கமாகிவிட்டது. 

இஸ்லாம் போதிக்கும் நற்குணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்மில் பலரும் மறந்து விடுகின்றனர். நமது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இஸ்லாத்தின் பண்புகள் மிளிர வேண்டும். அப்பொழுது பலர் இக்கொள்கையின்பால் ஈர்க்கப்படுவார்கள்.

அதற்கு ஒரு உதாரணம்: துபையில் இஸ்லாத்தை பிற மக்களுக்கு எத்திவைக்கும் லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்று நிகழ்ச்சியொன்றை ஏற்பாடுச் செய்திருந்தது. 

இந்நிறுவனம் பெண்களால் நடத்தப்படுவதாகும். நிகழ்ச்சியில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் கலந்துக் கொண்டனர். 

இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள என்னக் காரணம் என்பதுக் குறித்து அங்கே குழுமியிருந்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

 ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவமும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும். ஆயினும், இங்கே ஒரு நிகழ்வை எடுத்தியம்ப விழைகிறேன்:

பாகிஸ்தானைச் சார்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம். அவர்களின் வீட்டுப் பணிகளுக்கு உதவுவதற்காக மாற்று மதத்தைச் சார்ந்த பெண்ணொருவரை பணிக்கு அமர்த்தியிருந்தனர். 

அந்த பாகிஸ்தான் குடும்பத்தினர் பிற மனிதர்களிடம் பண்புடனும், பாசத்துடனும், கனிவோடும் நடந்துக் கொள்பவர்களாக இருந்தனர். 

இந்த பணிப் பெண்ணிடமும் பாரபட்சமின்றி கனிவோடு பழகுபவர்களாகயிருந்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல பணிப் பெண்ணிற்கு அக்குடும்பத்துடனான பாசப்பிணைப்பு அதிகமாகிறது. அவர்களுடைய நடத்தை பணிப் பெண்ணை பரவசப்படுத்துகிறது. 

ஏன் இவர்கள் இவ்வளவு கனிவோடும், பண்போடும் நடந்துக் கொள்கின்றார்கள் என்ற கேள்வி அவள் மனதிற்குள் எழுகிறது. தொடர்ந்து அவர்களை கண்காணிக்க ஆரம்பிக்கிறாள். 

ஒட்டுமொத்தக் குடும்பமும் தொழுகை உள்பட இஸ்லாத்தின் கடமைகள், கொள்கையின் மீது காட்டும் ஈடுபாட்டையும், நெருக்கத்தையும் அப்பணிப்பெண் கவனிக்கிறாள்.

இவ்வாறு பல நாட்கள் கழிந்துவிடுகின்றன. ஒரு நாள் அக்குடும்பம் தொழும் பொழுது தானும் சேர்ந்து தொழ வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுக்கின்றது அப்பெண்மணிக்கு!

ஆம்! அக்குடுப்பத்தினரின் நன்னடத்தைக் காரணமாக இஸ்லாத்தின் கொள்கையின் பால் அவள் ஈர்க்கப்படுகின்றாள். பின்னர் தாமதிக்காமல், அல்லாஹ்வை வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாகவும், 

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைவனின் தூதராகவும் ஏற்றுக்கொண்டு ஷஹாதத் கலிமாவை உரைக்கின்றார். 

இஸ்லாத்தின் ஒழுக்க மாண்புகள் உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவளை இஸ்லாத்தின்பால் ஈர்த்துவிடுகிறது!

ஆம்! நாம் நமது அன்றாட வாழ்க்கையில் நடந்துக்கொள்ளும் முறைகூட ’தஃவா’வாக மாறிவிடுகிறது. ஆகவே, நாம் நமது செயல்களை இஸ்லாத்தின் உயரிய பண்புகளின் அடிப்படையில் அமைத்துக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வுக்கு அடி 

பணிந்தவர்களாகவும், அதேவேளையில் பிறரை இஸ்லாத்தின்பால் ஈர்ப்பவர்களாகவும் மாறமுடியும். இன்ஷா அல்லாஹ்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.