Breaking News
recent

பட்டா வாங்குவது அவசியமா?


வீட்டுமனை வாங்குவதில் முக்கியமான ஒரு விஷயம் பட்டா வாங்குவது ஆகும். வீட்டு மனை வாங்கும்போது பத்திரப்பதிவு செய்தால் மட்டுமல்லாமல் பட்டாவும் வாங்க வேண்டும்.

வாரிசு முறையில் எழுதிவைக்கப்பட்ட வீட்டு மனையின் பட்டாவையும் நம்முடைய பெயரில் மாற்றம் செய்துகொள்ள வேண்டும். அது அவசியமானது.

நம் சொத்து, எந்தத் தாலுகா அலுவலக எல்லைக்குட்பட்டதோ அந்தப் பகுதி தாசில்தார் அலுவலகத்தில் பட்டா பதிவு மாற்றம் சம்பந்தமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பம் www.tn.gov.in/LA/forms என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. இந்த விண்ணப்பத்தை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பிறகு பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்.

ஒரு சர்வே எண் முழுவதும் வாங்கியிருந்து அதற்கு பட்டா மாற்றம் 15 நாட்களிலும் ஒரு சர்வே எண்ணில் ஒரு பகுதி, பட்டா மாற்றம் (உட்பிரிவு) 30 நாட்களிலும் பட்டா மாற்றம் தாலுகா அலுவலகத்தில் இருந்து நமக்கு செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்கான கட்டணமாக ரூ.80. தாலுகா அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், இருப்பிட முகவரி, பதிவு மாற்றம் கோரும் சொத்து பற்றிய விவரம் (அதாவது மாவட்டம், வட்டம், கிராமத்தின் பெயர், பகுதி எண், நகர அளவை எண்/மறுநில அளவை எண், உள்ளூர் பகுதி/நகரத்தின் பெயர், தெருவின் பெயர், மனைபிரிவு மனை எண், போன்ற விவரங்கள் கொடுக்கப்படவேண்டும்), மனை அங்கீகரிக்கப்பட்டதா, அங்கீகாரம் இல்லாத மனையா, என்பது பற்றித் தெரிவதற்காக மனைப்பிரிவு வரைபடத்தை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். பிறகு சொத்து எந்த வகையில் விண்ணப்பதாரருக்குக் கிடைக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட சொத்தை விண்ணப்பதாரர் அனுபவித்து வருவதற்கான சான்றுகளையும் இணைக்க வேண்டும். அதாவது சொத்து வரி ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஒன்றை இணைக்க வேண்டும்.

பதிவு மாற்றம் கோரும், இடம் சொத்தின் ஒரு பகுதியாக இருப்பின் உட்பிரிவிற்கு கட்டணம் செலுத்திய விவரம். (சலான் எண்/நாள்/தொகை/செலுத்திய வங்கி/கருவூலத்தின் பெயர்) போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் கொடுக்கப்படவேண்டும்.

தங்கள் விண்ணப்பத்தை தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ஒப்புதல் ரசீது வாங்கிக்கொள்ள வேண்டும். குறித்த காலத்துக்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.