Breaking News
recent

ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தலான அழைப்புப் பணி.!


பெங்களூருவில் உள்ள "சலாம் சென்டர்" என்ற அமைப்பின் அணுகுமுறை நிச்சயம் புதுமையானது, புரட்சிகரமானது.
இஸ்லாம் குறித்த தவறான புரிதலை களையவும், இஸ்லாமை எடுத்துக் கூறவும் ஆட்டோக்களில் சிறிய அளவிலான இஸ்லாமிய நூலகத்தை அமைத்து அழைப்பு பணியை மேற்கொண்டுள்ளது இந்த அமைப்பு.
ஓட்டுனருக்கு பின்புறம், அழகாக வடிவமைக்கப்பட்ட ஸ்டாண்டில், இஸ்லாம் குறித்து பல்வேறு தலைப்புகளில் துண்டுப்பிரசுரங்கள் வைக்கப்படுகின்றன.
பயணம் செய்பவர்கள் அந்த பிரசுரங்களை எடுத்து படிக்குமாறு ஊக்கப்படுத்தப்படுகின்றார்கள்.
இஸ்லாம் குறித்து மேலும் அறிந்துக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் முகவரியை கொடுப்பதின் மூலம் குர்ஆன், நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இஸ்லாம் குறித்த தவறான புரிதல்களை விளக்கும் ஒரு புத்தகம் ஆகியவை அடங்கிய பரிசுப்பெட்டகத்தை பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் ஆட்டோக்களில் வைக்கப்படும் துண்டுப்பிரசுரங்களின் தலைப்புகள் மாற்றப்படுகின்றன.
சலாம் சென்டரின் "எல்லோருக்கும் குர்ஆன்" என்ற செயல்திட்டத்தின் ஒரு பகுதியான இந்த அணுகுமுறை பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டம் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட போது, இதனை செயல்படுத்த முன்வந்தவர் படத்தில் உள்ள  "நிசார் அஹமத்" என்ற சகோதரர் தான்.
நிசார் அஹமது, ஒரு அற்புதமான பட்டத்திற்கு சொந்தகாரரும் கூட.
பெங்களூர் நகரின் "மிக நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்" என்ற விருதை மாநகர போலிஸ் கமிஷனரிடம் பெற்றவர் இவர்.
தன் நேர்மையான வாழ்விற்கு காரணமான இஸ்லாமை அடுத்தவருக்கும் எடுத்து சொல்லவேண்டும் என்ற ஆழ்ந்த ஈடுபாடு நிசார் அஹமதுவிடம் இருந்து தீவிரமாகவே வெளிப்பட்டது. 
விளைவோ, அவர் தன் நண்பர்களுக்கு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த, இன்று சுமார் 50 ஆட்டோக்கள் இறைச்செய்தியை அடுத்தவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் விஷயம் இத்தோடு முடியவில்லை. வேறு பல நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கின்றன.
தன் மார்க்கத்தை அடுத்தவருக்கு எடுத்துக்கூற வேண்டிய நிலை வந்தபோது தான், இந்த ஆட்டோ ஒட்டுனர்களில் சிலர் தங்கள் மார்க்கத்தையே படிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். 
அந்த வகையில், தங்கள் வாடிக்கையாளர்களை விட தங்களுக்கே இந்த செயல்திட்டம் அதிகளவில் பயனளிப்பதாக கூறுகின்றனர் அவர்கள்.
"என் வாழ்க்கையை நேர்மையான முறையில் அமைத்துக்கொள்ள இந்த செயல்திட்டம் உதவுகின்றது. முன்பு என் வாடிக்கையாளர்களிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டதற்காக இன்று அதிகமதிகமாக வெட்கப்படுகின்றேன்" - உணர்ச்சிப்பெருக்கில் கூறுகின்றார் காதர் பாஷா என்ற ஓட்டுனர்.
இஸ்லாமை சரியாக விளங்கி இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வை அமைத்திடவும், இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த அற்புதமான முயற்சி மேலும் வெற்றியடையவும் பிரார்த்திப்போம்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.