Breaking News
recent

தாகம் இல்லா விட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும் வெயில் தாக்கத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

வறுத்தெடுக்கும் கோடை வெயிலால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க ஆலோசனை பெற இலவச தொலைபேசி எண் 104ல் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெயில் கொளுத்துகிறது. 

நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் பல மாவட்டங்களிலும் 102 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. வெயிலால் ஏற்படும் விபரீதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை அவசியம் என பொதுமக்களை சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 

தகிக்கும் வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து தப்ப எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து நெல்லை பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அஸ்ரப் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார். 

இதுகுறித்து டாக்டர் அஸ்ரப் மேலும் கூறுகையில், நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையை விட 5 டிகிரி அளவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே, மக்கள் நண்பகல் 12 மணியிலிருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும், உடலை இறுக்கி பிடிக்காத தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். 


வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருந்தால் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும் இரவில் விலக்கியும் குளுமையாக இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மது, தேனீர், காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். 

வயதானவர்கள், குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கோடை வெயிலால் சன் ஸ்ட்ரோக் எனப்படும் உடனடி மயக்க நிலை பலருக்கு ஏற்படும். நடந்து செல்லும் போது லேசாக தலை சுற்றல் ஏற்படும். சுதாரிப்பதற்குள் மயக்க நிலைக்கு சென்று விடுவார்கள்.

உடனடியாக அந்த நபரை காற்றோட்டமான இடத்தில் படுக்க வைத்து ஆடைகளை தளர்த்த வேண்டும். உப்பு, சர்க்கரை கரைசல் கலந்த பானத்தை அருந்த கொடுக்க வேண்டும். 


குளிர்ந்த நீர், பழச்சாறும் கொடுக்கலாம். 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மேல் சிகிச்சை அளிக்க வேண்டும். 

கோடை நேரத்தில் மயக்கம் தவிர அதிக வெப்பத்தால் உடலில் கொப்புளங்கள், தோல் நோய், மஞ்சள் காமாலை, நீர்கடுப்பு போன்றவை ஏற்படலாம். பற்றாக்குறையால் கூடுதலாக பிடித்து இருப்பில் வைக்கப்படும் தண்ணீர் பாத்திரங்களை கட்டாயம் மூடி வைக்கவேண்டும். 

மேலும் கோடை வெப்ப பாதிப்புகளுக்கு கட்டணமில்லா தொலைபேசியான 1077 மற்றும் 104 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.  இவ்வாறு அவர் கூறினார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.