Breaking News
recent

பெரம்பலூரில் மீண்டும் தமிழ்ச்செல்வன் அதிமுக வெற்றி.!


பெரம்பலூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்செல்வன் 6,853 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.

பெரம்பலூர் பேரவைத் தொகுதியில் 1,36,003 ஆண் வாக்காளர்களும், 1,42,327 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 14 பேரும் என மொத்தம் 2,78,389 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதியில் 2,21,005 வாக்குகள் பதிவாகின. இத் தொகுதியில் அதிமுக சார்பில் இரா. தமிழ்செல்வன், திமுக கூட்டணி சார்பில் ப. சிவகாமி மேலும் 13 பேர் போட்டியிட்டனர்.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தேர்தல் பார்வையாளர் வி.என். விஷ்ணு, தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. பேபி ஆகியோர் முன்னிலையில் தொடங்கிய இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் முதலாவதாக, அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன.

தொடர்ந்து, 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்செல்வன், திமுக வேட்பாளர் ப. சிவகாமியை விட ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வந்தார்.

9-வது சுற்றில் அதிமுக வேட்பாளரை விட, திமுக வேட்பாளர் ப. சிவகாமி அதிக வாக்குகள் பெற்றார்.

அதைத்தொடர்ந்து எண்ணப்பட்ட சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் தமிழ்செல்வன் திமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று வந்தார். அஞ்சல் வாக்குகள் உள்பட 17 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணும் பணி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதில் அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்செல்வன் 1,01,073 வாக்குகளும், தி.மு.க வேட்பாளர் ப. சிவகாமி 94220 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து, தமிழ்ச்செல்வன், சிவகாமியைவிட 6,853 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:

1. இரா. தமிழ்ச்செல்வன் (அதிமுக) 1,01,073, 2. ப. சிவகாமி (திமுக கூட்டணி) 94220, 3. கி. ராஜேந்திரன் (தேமுதிக) 11, 482, 4. மு. சத்தியசீலன் (பாமக) 4,222, 5. மு. கலியபெருமாள் (பாஜக) 1981, 6. நெ. அருண்குமார் (நாம் தமிழர்) 2521, 7. பெ. குணாளன் (தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்) 880, 8. பெ. பாலச்சந்திரன் (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) 500, 9. சி. பிச்சைமுத்து (சிவசேனா) 1311, 10. செல்லையா (சுயேச்சை) 592, 11. ப. பன்னீர்செல்வம் (சுயேச்சை) 584, 12. து. பரமசிவம் (சுயேச்சை) 500, 13. அ. குணசேகரன் (சுயேச்சை) 367 நோட்டாவில் 3,040 வாக்குகள் பதிவாகின.

இந்தத் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் இரா. தமிழ்செல்வனுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ரா. பேபி சான்றிதழ் அளித்தார்.

பொது பார்வையாளர் வி.என். விஷ்ணு, பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.பி. மருதராஜா, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் எம்.என். ராஜாராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.