Breaking News
recent

ஹஜ் பயணம் செய்ய ஈரானியர்களுக்கு அனுமதி மறுப்பா?: சவுதி அரேபியா விளக்கம்.!


மக்கா, மதினா நகரங்களுக்கு புனித யாத்திரையாக செல்லும் ஹஜ் பயணத்தில் ஈரான் நாட்டினர் பங்கேற்க தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை தொடர்பாக சவுதி அரேபியா விளக்கம் அளித்துள்ளது.

இஸ்லாம் மதத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்று வருகின்றனர். 

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது இங்குள்ள பிரபல மசூதியில் கிரேன் அறுந்துவிழுந்த விபத்து மற்றும் மினா பகுதியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 2200-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

இதற்கிடையே, ஈரான் நாட்டின் பெரும்பான்மையினத்தவர்களான ஷியா பிரிவைச் சேர்ந்த பிரபல மதத் தலைவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுடனான தூதரக உறவுகளை ஈரான் முறித்து கொண்டது. மேலும், சவுதிக்கு செல்லும் மற்றும் சவுதியில் இருந்துவரும் விமான சேவைகளுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹஜ் யாத்திரையில் தங்கள் நாட்டினர் கலந்து கொள்ள கூடாது என சவுதி அரேபியா தடை விதித்துள்ளதாக சமீபத்தில் ஈரான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. 


ஹஜ் பயணத்துக்கு விசா கோருபவர்கள் ஈரானில் இருந்து வேறொரு நாட்டுக்கு சென்று, அந்த நாட்டு தூதரகம் மூலமாக மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என சவுதி அரசு நிபந்தனை விதித்ததாக முன்னர் செய்திகள் வெளியாகின.

ஆனால், இந்த செய்திகளை சவுதி வெளியுறவுத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். விசாவுக்கு விண்ணப்பிக்கும் பிறநாட்டினர்போல் யார் வேண்டுமானாலும் ‘ஆன்லைன்’ மூலம் ஹஜ் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 எனினும், வழக்கமாக ஹஜ் பயணங்களின்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்ப ஈரானியர்களை அனுமதிக்க மாட்டோம். இந்த நிபந்தனையை தவிர எந்த தடையும் நாங்கள் விதிக்கவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.