Breaking News
recent

ஆபத்தை ஏற்படுத்தும் பாஸ்ட்புட்: மாரடைப்பு, ரத்த அழுத்தம் ஆண்மைக்குறைபாடு அபாயம்; டாக்டர்கள் எச்சரிக்கை.!


பாஸ்ட் புட் (ஜங்க் புட்) சாப்பிடுவதால் பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில்  வேலூர், காட்பாடி, ஆற்காடு, அரக்கோணம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வாலாஜா, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் அதிகம் உள்ளன. 

இங்கு படிக்கும் மாணவர்கள், மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை குறி வைத்தே  அக்கல்லூரி மற்றும் விடுதிகள் எதிரே அதிகளவு பாஸ்ட் புட் கடைகள் திறக்கப்படுகின்றன. 

தூசியைக் கூட பொருட்படுத்தாமல் சாலையோரம்  வெளிப்புறத்தில் நின்று சாப்பிடுவது, பாரம்பரிய உணவிலிருந்து மாறுபட்ட சுவை உள்ளிட்டவைகளால் இளைஞர்களிடம் இந்த வகை உணவு மற்றும்  கடைகள் வரவேற்பை பெற்றுள்ளன. 

டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே இருந்து வந்த இக்கடைகள் கடந்த சில ஆண்டுகளாக வேலூர்  மாவட்டத்திலும் பரவலாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மாவட்டம் முழுவதும் பாஸ்ட்புட் ஹோட்டல்கள் தவிர, சுகாதாரமற்ற நிலையில் உள்ள  சாலையோர கடைகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்திற்கு மேல் உள்ளன. 


இங்கு தயாரிக்கப்படும் பாஸ்ட் புட் உணவில் சுவை மற்றும்  வாசனைக்காக பல கெமிக்கல் கலந்த பொருட்களை உணவோடு சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகாத நாட்கள் கடந்த இறைச்சியும் இதில்  பயன்படுத்தப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி சிறு வயது குழந்தைகளும் இதன் சுவைக்கு மயங்கி இந்த உணவை தொடர்ந்து சாப்பிடும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளனர். சுகாதாரமற்ற நிலையில் இருந்தாலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இந்த கடைகளை கண்டுகொள்வதில்லை. 


தற்போது  அதிகமாகி வரும் நோய் தாக்குதலுக்கு உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பாஸ்ட் புட்  உணவால் பல்வேறு நோயை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இதுகுறித்து அரசு மருத்துவர் ஒருவர்  கூறுகையில், ‘நம்முடைய பாரம்பரிய உணவு வகையில் உள்ளதை போன்று ஆயிரக்கணக்கான மடங்கு கலோரி பாஸ்ட் புட் உணவு வகைகளில்  உள்ளது. இந்த உணவில் கலக்கப்படும் சைனீஸ் சால்ட், வெனிகர் உட்பட அனைத்தும் கெமிக்கல் ஆகும். 

இதனால் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடும் போது மாரடைப்பு, ரத்த அழுத்தம், அல்சர், டயரியா, சிறுவர்கள் தொடர்ந்து  சாப்பிடுவதால் ஆண்மைக் குறைபாடு, சர்க்கரை நோய் ஏற்படும். நூடுல்ஸில் வழுவழுப்பு தன்மைக்காக சேர்க்கப்படும் மெழுகு போன்ற பொருள்  எளிதில் ஜீரணமாகாது. 


இதனால் குடல், இரைப்பை, உணவுக்குழாய் கேன்சர் வர வாய்ப்புள்ளது. இந்த வகை உணவை சாப்பிட்டால் பெண்களுக்கு  மலட்டுத் தன்மை, குழந்தை பேறு பிரச்னை, கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் நோய் தொற்று ஏற்படும். எனவே, இந்த உணவை  அறவே தவிர்க்க வேண்டும்” என்றார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.