Breaking News
recent

சர்க்கரை நோயாளிகளின் அளவை கட்டுப்படுத்த திட்டம் : குளிர்பானம் மற்றும் துரித உணவுகளுக்கு புதிய வரி..!


நாட்டில் அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகளின் அளவை கட்டுப்படுத்த சர்க்கரை கலந்த இனிப்பு பானங்கள் மற்றும் துரித உணவுகளுக்கு புதிய வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் இவற்றிற்கான விளம்பர விதிகளை சற்று கடுமையாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவில் சமீப காலமாக சரக்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. 

இந்தியாவில் கடந்த 2000ம் ஆண்டு 32 மில்லியனாக இருந்த சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 2013ம் ஆண்டு 63 மில்லியனாக அதிகரித்தது. அடுத்த 15 ஆண்டுகளில் இது 101.2 மில்லியனாக அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவலை சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. 

ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் குளிர் பான வகைகளை சாப்பிடுவதை மக்கள் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை கழகமும் செயல்பட்டு வருகிறது. 

இதனையடுத்து மேற்கண்ட உடல் உபாதைகளை தவிர்க்க தீவிரமாக ஆலோசனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் குழந்தை பருவத்தில் இருந்தே அதிகரித்து வரும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பல தரப்பிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 


மேலும் சர்க்கரை அதிகம் கலந்த குளிர்பானங்களாலேயே சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்க்கரை நோய் ஆய்வு கழகம் குறிப்பிட்டது. 

இது தவிர உலக சுகாதார மையம் துரித உணவுகள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள் உள்ளிட்டவைகளை அதிகம் குடிப்பதால் உடல் பருமன் போன்ற பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தது. இதனையடுத்து நோய்களை கட்டுப்படுத்த சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் துரித உணவுகளுக்கு புதிய வரியை விதிக்க மற்றும் அவற்றின் விளம்பரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க  அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.