Breaking News
recent

பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத 108.5 டிகிரி வெயில் குழந்தைகள், பெரியவர்கள் திண்டாட்டம்.!


பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு 108.5 டிகிரியென வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், குழந்தைகள், பெரியவர்கள் திண்டாட்டம் அடைந்தனர். விடுமுறையாக இருந்தும் வெளியே செல்லமுடியாமல் வீட்டில் முடங்கினர். 

அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கப்படாத நிலையில் சூரியனின் வெப்பம் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பது பொதுமக்களை பலஇன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு அம்மை நோய்களும், பெரியவர்களுக்கு நீர்க் கடுப்பு பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மையத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக 100டிகிரிக்குக் குறையாமல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 13ம்தேதி 106.7டிகிரி வெயில் பதிவானது. 

இதுவே பெரம்பலூரின் அதிகப்பட்ச வெயில் அளவாகக் கருதப்பட்டு வந்தது. 23ம்தேதியும் இதேபோல் 106.7டிகிரி வெயில் பதிவானது. இந்நிலையில் நேற்று மிகமிக அதிகப்பட்சமாக 108.5டிகிரி வெயில்பதிவாகி பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏரி,குளங்களில் உள்ள தண்ணீர் வறண்டுவிட்ட நிலையில், வயல்களிலும் பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், பசுமையே இல்லாத பூமியில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. 

இதனால் பெரம்பலூர் நகரிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகள் விற்பனை செய்யும் கடைகளில் விலையைக்கண்டு அஞ்சி தேங்கிக்கிடந்த ஏர் கூலர்கள், ஏர் கண்டிஷனர்கள் ஆகியவை மளமளவென விற்பனையாகி வருகின்றன. மெத்தைகள் கொதிப்பதால் கயிற்றுக்கட்டில்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் தர்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகளை சாப்பிட்டும், இளநீர், மோர், நன்னாரி, எலுமிச்சை சர்பத் ஆகியவற்றை குடித்தும் தாகத்தைத் தணித்து வருகின்றனர். அதேபோல் ஐஸ்கிரீம் கடைகளிலும் கூட்டம் அதிகரித்தே வருகிறது. 

நகரிலும், கிராமப் புறங்களிலும் நேற்று ஞாயிறு விடுமுறையென்றபோதும் பொதுமக்கள் வெயிலுக்குப் பயந்து வெளியேசெல்லாமல் தவித்துவந்தனர். கொடுமையான வெயிலை சமாளிக்க கோடைமழை பெய்யுமான என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.