Breaking News
recent

உலக பொருளாதார சுழற்சியில் இஸ்லாத்தின் தாக்கமும் பங்கும்.!


மனித இனம் விவசாய நாகரீக சமூக முறைக்குள் நுழைந்த அடுத்த நொடியிலிருந்து சுற்றத் தொடங்கிவிட்டது பொருளாதாரம் என்னும் சக்கரம்.

 அபரிமிதமான பயிர் உற்பத்திக்கு துணைப் புரிந்த செழிப்பான மண் வளமும், விவசாய தொழில் நுட்பங்களும், பாசனத்திற்கு வசதி செய்து விளைச்சலை பெருக்கிய அணை தொழில் நுட்பமும் இன்றையிலிருந்து 10,000 வருடங்களுக்கு முற்பட்ட மனித சமூகத்தின் பொருளாதார செயல்பாடுகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்தன.

மிகு உணவு உற்பத்தி தன்னிறைவை அளித்ததுடன் சமய மற்றும் கலாச்சார பழக்க வழக்கங்களிலும் தாக்கத்தையும் வளர்ச்சியையும் கொண்டுவந்தது. 

இந்த வளர்ச்சியானது மொழி, கலை, இலக்கியம் என்று அனைத்து துறைகளிலும் புதுமையையும் புத்துணர்ச்சியையும் கொண்டுவந்தது. 

ஒரு நாகரீகத்தின் இத்தகைய வளர்ச்சி பிற நாகரீக மக்களின் சமூக வாழ்வை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகவும் மாறிப்போனது. இதற்கு காரணமாக அமைந்தது பொருளாதாரத்தின் சுழற்சி.

உலக நாகரீகங்களில் சமூக மற்றும் பொருளாதார அளவில் மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தும் பொருளாதார சுழற்சியை ஏற்படுத்திவைத்தது வணிகம். 

மிகு உற்பத்தியை பிற நாகரீகங்களுக்கு எடுத்துச் சென்ற வணிகம் அன்றைக்கு இந்த பூமியில் செழித்திருந்த அனைத்து நாகரீகங்களையும் ஒரு பொருளாதர சக்கரத்தின் கீழ் கொண்டுவந்தது.

பிற நாகரீகங்களின் சமூக சமய வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பொருளாதர சக்கரத்தை முதலில் சுழற்றியவர்கள் தமிழர்கள். சிந்துவெளித் தமிழர்கள் தங்களின் வணிகத்தின் மூலம் பிற நாகரீகங்களான எகிப்து, சமேரிய நாகரீகங்களில் கலை, சமய, சமூக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தமிழர்களின் கடல் வணிகம் அன்றைய நாகரீகங்களின் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிக்கும் விதமாக இருந்தது.

சிந்துவெளி தமிழர்களின் வணிக குழுக்கள் பெரும் மூலதனங்களின் ஊற்றுக் கண்ணாக இருந்திருக்கின்றன. அன்றைய சிந்திவெளி வணிக நிறுவனங்களின் பெயர்கள் இன்னமும் வெளிக் கொண்டுவரப்படவில்லை என்றாலும் அவற்றின் பிற்கால வடிவங்களை உறுதியாக அடையாளம் காட்ட முடியும் அவைகள். திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், சித்திரமேழிப் பெரியநாட்டவர், மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், வளஞ்சியர்.

இந்த வணிக நிறுவனங்கள் 10,000 வருடத்திற்கு முற்பட்ட எகிப்திய சுமேரிய நாகரீகங்களுடன் வணிகத் தொடர்புகளை ஏற்படுத்தி எகிப்திய சுமேரிய மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கங்களை ஏற்படுத்தின. அந்த மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாகவும் தமிழர்களின் இத்தகைய நிறுவனங்கள் திகழ்ந்தன. அதன் வழி அந்த மக்களின் கலை இலக்கிய விவசாய தொழில் நுட்பங்களிலும் வளர்ச்சியும் புதுமைகளும் ஏற்ப்படுத்தப்பட்டன.

இந்த நாகரீகங்களின் அரசியல் நடவடிக்கைகளையும் நகர்வுகளையும் தீர்மானிக்கும் சக்தி இந்த நிறுவனங்களிடம் இருந்தது. சிந்துவெளி தமிழர்கள் ஏற்ப்படுத்திய தாக்கம் அடுத்த 6000 வருடங்களுக்கும் அதற்கும் மேலும் நீடித்தது. இதற்கு அடுத்து எகிப்தியர்களின் பாரோ அரசர்களின் எழுச்சி இந்த நடவடிக்கையை கைப்பற்றியது. இதே காலக் கட்டத்தில் சிந்துவெளித் தமிழர்களின் வீழ்ச்சியானது தொடங்கியது.

எகிப்திய நாகரீகத்தின் எழுச்சி அடுத்த 5000 ஆண்டுகள் நீண்டது. எகிப்திய எழுச்சி கிரேக்க ரோமானிய நாகரீகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிரேக்க ரோமானிய கலை இலக்கிய சமூக சமய நடவடிக்கைகள் எகிப்திய கலாச்சாரத்திலிருந்து வேர்கொண்டது. எகிப்திய பாரோக்களின் கீழிருந்த வணிகர்களின் நடவடிக்கைள் இதற்கு பெரிதும் உதவி செய்தன.

அடுத்து ரோமானிய பேரரசு பொருளாதார சக்கரத்தை சுழற்றும் காரணியாக அமைந்தது. அதன் வழி மேற்குல நாடுகளின் கலை இலக்கிய அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது அடுத்து 1000 வருடங்கள் நீடித்தது. இதற்கு அடுத்து வருகிறது இஸ்லாமிய நாகரீகத்தின் தொடக்கம். ஆனால் இன்றைய மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களும் அறிஞர்களும் (இந்த விசயத்தில் இன்றைய அன்றைய என்கிற வித்தியாசமெல்லாம் கிடையாது, என்றைக்கும் என்பதே பொருந்தும்) இதை இருட்டடிப்பு செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

இந்த பொருளாதார சக்கரத்தை ரோமானிய பேரரசிற்கு அடுத்து கையில் எடுத்ததாக அவர்கள் குறிப்பிடுவது இத்தாலியை. பின்நவீனத்துவ இத்தாலியையே அவர்கள் இன்றைய வரையிலுமான உலக சமூகத்தின் கலை, இலக்கிய, அறிவியல் தொழில் நுட்பங்களின் தாக்கங்களுக்கு காரணியாக காட்டுகிறார்கள். இத்தாலியின் பின்நவீனத்துவமே ஐரோப்பியர்களின் அறிவொளி காலத்திற்கு தொடக்கம் என்று பொய்யை முன்வைக்கிறார்கள்.

இத்தாலியின் பின்நவீனத்துவ எழுச்சி கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கடல் வணிக வழியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை முன்னேடுத்து உலக பொருளாதார சக்கரத்தை ஐரோப்பியர்களின் கைகளுக்கு கொண்டுபோனதாக சொல்கிறார்கள். ஐரோப்பியர்களின் கிழக்கு ஆசிய நாடுகளுடனான கடல் வழி வணிகம் உலகப் பொருளாதாரத்தை மேற்குலகத்திடம் கொடுத்திருந்தாலும் மேற்குலகம் மற்றொரு நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே உலக பொருளாதார சக்கரத்தை தன் கைகளுக்குள் மடை மாற்றிக்கொண்டது.

மேற்குலம் தன் கைகளுக்குள் மடை மாற்றிக்கொண்டது எந்த நாகரீகத்தின் தொடர்ச்சி? எந்த நாகரீகத்தின் கண்டுபிடிப்புகளையும் அதன் வழி சமூக, கலை, இலக்கிய, தொழில் நுட்ப தாக்கங்களையும் தனது தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டது? இத்தகைய கேள்விகள் தலையெடுத்தாலும் அதன் தலையில் பின்நவீனத்துவ எழுச்சியை வைத்து தட்டி மேலே எழாமல் கவனமாக பார்த்துக்கொள்வது மேற்குல அறிவு சீவிகளின் அறிவு பிழைப்பு. ஆனால் வரலாற்றிற்கு இந்த பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியமில்லாததால் இத்தகைய கேள்விகளுக்கு அது தெளிவாக பதில் சொல்கிறது இஸ்லாமிய நாகரீகம் என்று.

இஸ்லாமிய நாகரீகத்தின் சமூக தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளையும் சாதனைகளையுமே இத்தாலிய பின்நவீனத்துவம் தனது தொடர்ச்சியாகக்கொண்டது. அந்த தொடர்ச்சியே மேற்குலகின் பொருளாதார சக்கரத்தின் சாதனைகளாக மாறி இன்றையவரைக்கும் உலக சமூகத்தின் சமூக நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது. சுற்றி வளைத்து மூக்கைத் தொடாமல் நேரடியாக உங்கள் மூக்கைத் தொட்டு சொல்வதென்றால் இஸ்லாமிய நாகரீகத்தின் சாதனைகளே இன்றைய உலக சமூகத்தின் கலை, இலக்கிய, அறிவியல் தொழில் நுட்ப துறைகளின் அடிப்படை காரணி.

அந்த வகையில் சிந்துவெளி தமிழர்களிடம் இருந்து எகிப்தியர்களின் கைகளுக்கு மாறிய பொருளாதார சக்கரம், எகிப்தியர்களிடமிருந்து கிரேக்க ரோமானியர்களின் கைகளுக்கு மாறியது. பிற்பாடு அது ரோமானியர்களின் கைகளில் இருந்து இஸ்லாமிய நாகரீகத்தின் கைகளுக்கு மாறியது. இன்றைக்கு வரைக்கும் அது இஸ்லாமிய நாகரீகத்தின் கைகளிலேயேதான் இருக்கிறது.

ரோமானிய பேரரசியின் அந்திம காலம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டுகளில் தொடங்குகிறது. அது முதல் மேற்குலகில் கலை, இலக்கிய மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறைகளில் தேக்க நிலை தொடங்குகிறது. இந்த காலக் கட்டம் உலகம் முழுவதும் ஒரு தேக்க நிலையை உண்டாக்கிய காலக்கட்டம். சிந்துவெளி தமிழர்கள், எகிப்தியர்கள், கிரேக்க ரோமானியர்கள் என்று கைமாறி கைமாறி சடசடவென்று ஓடிவந்த பொருளாதார சக்கரம் இந்த காலகட்டத்தில் புதை மணலில் சிக்கியதுப் போல சிக்கி தள்ளாடத் தொடங்குகிறது.

ரோமானிய பேரரசு போதாத குறைக்கு போப்பாண்டவர்களின் கைப்பாவை அரசுகளாக மாறிப்போனது. கிருத்தவ மதம் கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் எவ்வித புற ஒடுக்குமுறைகளை செலுத்துவில்லை என்றாலும் வாடிகனின் போப்பாண்டவர்கள் அரசியல் விவகாரங்களில் தலையிட்டதின் காரணமாக சமூக நடைமுறையில் மதத்தின் தாக்கத்தை திணிக்க முயன்றார்கள்.

கிரேக்க ரோமானிய கலை, இலக்கிய, அறிவியல் நடவடிக்கைகள் அனைத்தும் கடவுள் நம்பிக்கையற்ற Paganism நடைமுறைகள் என்று சொல்லி வாடிகன் அவைகளுக்கு முட்டுக் கட்டைகளை போட்டன. இந்த சூழ்நிலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுகள் தொடங்கி மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒரு புதிய வெளிச்சம் பரவத் தொடங்குகிறது. நபிகள் நாயகத்தின் காலக் கட்டத்தில் உருவான இஸ்லாமிய நாகரீகம் மேற்குலகம் சந்தித்துவந்த தேக்க நிலைக்கு ஒரு முடிவைக் கொண்டுவந்தது.

இஸ்லாமிய Abbasid, Fatimid மற்றும் Umayyad பேரரசுகள் ரோமானிய பேரரசு தன்னுடைய அந்திம காலத்தில் கைகளில் வைத்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டிருந்த உலகப் பொருளாதரச் சக்கரத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்டன. அது தொடங்கி கலை, இலக்கிய, அறிவியல் துறைகளில் ஒரு புதவிதப் பாய்ச்சல் தொடங்கியது. இன்றைய நவீன உலகில் மனிதர்கள் பார்த்து அனுபவித்து வரும் கலை, இலக்கிய, அறிவியல் சாதனைகள் அனைத்திருக்கும் வித்திடப்பட்டது இஸ்லாமிய நாகரீகத்தின் போது. இப்படி சொல்வது இஸ்லாமிய நாகரீகம்தான் இன்றைய கலை, இலக்கிய அறிவியல் துறைகளைத் தோற்றுவித்தன என்பது அர்த்தமல்ல.

இந்த துறைகள் இன்றைய நிலையில் வளரந்து நிற்க பெரும் பங்களிப்பு செய்தது இஸ்லாமிய நாகரீகம். சிந்துவெளி தமிழர்கள் தொடங்கி, எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் என்று வேகமாக வளர்ந்து வந்த இந்த சமூகத் துறைகள் திடீரென்று தேங்கி திக்குத் தெரியாமல் தள்ளாடி மீண்டும் அறியாமை இருளுக்குள்ளேயே செல்ல இருந்த சமயத்தில் அப்படி மனித சமூகத்தை பின்னோக்கி போகவிடாமல் தடுத்து மனித முயற்சிகளுக்கும் சிந்தனைகளுக்கும் புது இரத்தம் பாய்ச்சியது இஸ்லாமிய நாகரீகம்.

இஸ்லாமிய நாகரீகம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுத் தொடங்கி மனித முயற்சிகளிலும் சிந்தனைகளிலும் பாய்ச்சி இந்த புது இரத்தமே இன்றைய நவீன மனிதர்களின் முயற்சி மற்றும் சிந்தனைகளுக்கு தாய்ப்பால்.

நாம் ஏற்கனவே இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள் குறித்த செய்திகளை தனிக் கட்டுரைத் தொடராக பார்த்துவிட்டதால், இந்த கட்டுரையில் இஸ்லாமிய நாகரீகம் மனித சமூகத்தின் சிந்தனைகளிலும் பார்வையிலும் ஒரு புது தொடக்கத்தை ஏற்படுத்தக் காரணமானவர்களை பார்க்கலாம்.

மனித சிந்தனைகளில் மாற்றத்தையும் புது பார்வையையும் ஏற்படுத்தும் துறைகளில் முதலில் இருப்பது தத்துவமே. அப்படி மனித சிந்தனைகள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டுகளில் தள்ளாடிக்கொண்டிருந்தபோது வந்தவர் Abu Nasr Al-Farabi (872 – 950). உலக மக்கள் நாகரீகம் ஒருவரையே முதல் தத்துவ ஞானியாக கொள்கிறது அவர் Aristotle (திருவள்ளுவரை என்ன என்று சொல்வதாம்! நல்லா இருக்கு மேற்கின் நியாயம்).

இவருக்கு அடுத்து வருபவர் ஆம் Second Master என்கிற பெயரில் Abu Nasr Al-Farabi. அரிஸ்டாட்டிலை அறிந்திருக்கும் தமிழர்களும் தமிழ் இஸ்லாமியர்களும் இவரைப் பற்றி அறியாமல் இருப்பது துர்பாக்கியம். இவர் தத்துவ ஞானி மட்டும் அல்ல இசைக் கலைஞர் மற்றும் அரசியில் அறிஞரும் கூட. கீழ் கண்டவைகள் மனித குல சிந்தனைகளை வளர்க்க இவர் அளித்த பங்களிப்புகள்,
1.      Al-Madina Al-fadila (The Virtuous City)
2.      Risala fi'l-'aql (Epistle on the Intellect)
3.      Kitab ihsa' al-'ulum (The Book of the Enumeration of the Sciences)

இவருக்கு அடுத்து தத்துவத் துறையில் மிகப் பிரசித்திப் பெற்றவர் Ibn Ishaq Al-Kindi (801 – 873). ஒருவகையில் Abu Nasr Al-Farabi-யை விடவும் பலராலும் அறியப்படும் தத்துவ ஞானி Ibn Ishaq. ஆனால் மேற்குலம் இவரைப் பற்றி வாய் திறக்காது. அது வாயைத் திறக்காவிட்டால், வரலாற்றிற்கு வாய் இல்லையா என்ன!

இவர் ‘அரேபியர்களின் தத்துவ ஞானி’ என்று சிறப்பிக்கப்படுகிறார். தமிழர்களுக்கு திருவள்ளுவரைப் போல. இன்றைய நவீனத் தத்துவத் துறை, இவரையே கிரேக்க தத்துவத்திற்கும் இஸ்லாமிய தத்துவத்திற்கும் இணைப்பை ஏற்படுத்தும் ஒரு கண்ணியாக அடையாளம் காண்கிறது. கிரேக்க தத்துவ ஞானிகளின் கருத்துக்களை ஆழ்ந்து ஆராய்ந்து உள்வாங்கி அவற்றில் இருக்கும் பிழைகளை சரி செய்து அவைகளை அடுத்து நிலைக்கு எடுத்துச் சென்றவர் இவர். வெறுமனே கிரேக்க தத்துவ ஞானிகளின் படைப்புகளை மொழிப்பெயர்க்காமல் அவைகளின் குறைகளைக் கண்டு தன் வழியில் அந்த தத்துவங்களை சீர்ப்படுத்து இஸ்லாமிய உலகத்திற்கு அளித்தவர்.

இவருடையப் படைப்புகள்,

1.      Fi wahdaniya Allah wa tunahiy jirm al-'alam (On the Unity of God and the Limitation of the Body of the World)
2.      Fi kammiya kutub Aristutalis wa ma yahtaj ilahi fi tahsil al-falsafa (The Quantity of the Books of Aristotle and What is Required for the Acquisition of Philosophy)
3.      Fi hudud al-ashya' wa-rusumiha (On the Definitions of Things and their Descriptions)
4.      Fi al-falsafa al-ula (On First Philosophy)

அடுத்தவர் Ibn Rushd (1126 – 1198). இவருடைய படைப்பு Tahafut al-tahafut (Incoherence of the Incoherence). இந்த படைப்பு தத்துவ விசாரணைகளின் தொகுப்பு. இஸ்லாமிய நாகரீகம் இந்த உலகத்திற்கு அளித்த சிறந்த தத்துவ ஞானிகளான இந்த மூவரும் Neoplatonism-த்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர்கள். ஆனால் மேற்குலக அறிவு சீவிகள் இந்த மூவரும் Neoplatonism-த்திற்கு அளித்த பங்களிப்பை மறைத்து இத்தாலியின் பின்நவீனத்துவ சிந்தனையாளர்களே Neoplatonism-த்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் என்று வரலாற்றை திரித்து வருகிறார்கள்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.