Breaking News
recent

பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற நாளை கடைசி நாள்.!


நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்க புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.

கடந்த 8-ந்தேதி வெளியான இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு படையெடுத்தனர்.

ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய விதிக்கப்பட்ட காலக்கெடு நாளை (30-ந்தேதி)யுடன் முடிகிறது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை ஏழை-எளிய, நடுத்தர மக்களை பெரிதும் பாதித்தது. வங்கிகளுக்கு போதுமான அளவு புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வினியோகிக்கப்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணி நேரம் வங்கி முன்பு வரிசையில் காத்து நின்றாலும் தேவையான பணத்தை பெற முடியவில்லை. பணத்தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவிலேயே பணம் வழங்கப்படுகிறது.

மாத கணக்கில் ஏ.டி. எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் மக்களின் அவசர செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை.

வங்கிகளில் மட்டுமே பணம் பெற வேண்டிய நிலை நீடித்து வருவதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறையவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், வங்கி கணக்கில் இருந்துதான் பணம் பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மக்கள் பல மணி நேரம் இன்னும் காத்து நிற்கிறார்கள்.

புதிய ரூ.500 நோட்டு புழக்கம் அதிகமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தாராளமாக வினியோகிக்கப்படாததால் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனையும் தீரவில்லை.

வங்கிகளில் 50 நாட்களாக நீடித்து வரும் பணப்பிரச்சனையில் இருந்து எப்போது விடிவு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு நாளை முடிகிறது. அதன்பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கையில் வைத்திருந்தால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதனால் வங்கிகளில் கூட்டம் இன்று மேலும் அதிகரித்தது. வழக்கமாக பணம் எடுப்பதற்கு தான் வாடிக்கையாளர்கள் காத்து நிற்பார்கள். ஆனால் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கணக்கில் டெபாசிட் செய்வதற்காக பலர் வரிசையில் காத்து நின்றனர்.

மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றுவது என்பது சாதாரண வி‌ஷயமல்ல. பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகளும், அதற்கான விளக்கங்களும் எழுத்து பூர்வமாக பெற்றுக் கொண்டு தான் பழைய நோட்டினை பெறுவார்கள்.

அதனால் அத்தகைய சிக்கலான நடவடிக்கையை விரும்பாத சிலர் இன்று வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வந்தனர்.

அரசு வங்கிகளில் மட்டுமின்றி தனியார் வங்கிகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் இன்று அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டன.

இதுகுறித்து வங்கி உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ரூபாய் நோட்டு பிரச்சனை 50 நாட்களாக நீடித்தாலும் இன்னும் வங்கிகளுக்கு தேவையான அளவு பணம் வினியோகிக்கப்படவில்லை. தினமும் ரூ.4 லட்சம், ரூ.5 லட்சம் என்ற அளவில் தான் வழங்குகிறார்கள். அதனால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.4000, ரூ.5000 வீதம் கொடுக்கிறோம். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வேறு வழியில்லை.

ஏழை-எளிய மக்களின் அவசர தேவையை அறிந்து பணம் வழங்குகிறோம். அதே நேரத்தில் வியாபார பிரமுகர்கள், பல்வேறு தொழில் செய்வோர்களின் நலனினும் அக்கறை செலுத்துகிறோம்.

பழைய ரூபாய் நோட்டுகளை நாளை வரை மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு வங்கிகளில் மாற்ற இயலாது. இன்று பழைய நோட்டுகள் கொஞ்சம் வந்துள்ளன. எவ்வித விளக்கமும் கேட்காமல் வாடிக்கையாளர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறோம்.

வங்கிகளில் நீடித்து வரும் பணம் தட்டுப்பாடு பிரச்சனை ஜனவரி மாதத்தில் இருந்து சற்று குறையும் என்று எதிர்பார்க்கிறோம். புதிய ரூபாய் நோட்டு அதிகளவு வினியோகிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

Blogger இயக்குவது.