சார்ஜாவில் கல்லூரி பஸ் கவிழ்ந்து 11 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கல்லூரி
சார்ஜா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு சார்ஜா மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் 11 மாணவிகள் மட்டும் கல்லூரி பஸ்சில் வந்து வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
சம்பவத்தன்று வழக்கம்போல் கல்லூரி முடிந்து மாலை 4 மணிக்கு கல்லூரி பஸ்சில் ஏறினார்கள். அந்த பஸ் அங்கு இருந்து புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. கல்லூரியில் இருந்து சில கிலோமீட்டர் கடந்து சார்ஜாவில் உள்ள ரிங்சாலையில் பஸ் வேகமாக வந்து அங்கு உள்ள வளைவில் திரும்பியது.
மாணவிகள் படுகாயம்
அப்போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கட்டையின் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ் தலைகீழாக கவிழ்ந்து உருண்டோடி நின்றது. பஸ்சில் இருந்த மாணவிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். மாணவிகள் அனைவரும் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.
உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக வந்து காயமடைந்த மாணவிகளை மீட்டனர். இது குறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவர்களை அல் காஸிமி மற்றும் அல் குவைதி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். டிரைவரின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ் கவிழ்ந்ததால் சார்ஜா ரிங் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பஸ்கள், கார்கள், வேன்கள் நீண்ட வரிசையில் மேற்கொண்டு செல்ல முடியாமால் அப்படியே நின்று கொண்டிருந்தன. சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அங்கு இருந்து பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக