Breaking News
recent

பால் சுரக்கும் பாலைவனம்..!!



மிழ் இலக்கியங்களில் காணப்படும் நிலப் பகுப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை பகுப்புகளில் ஆதித் தமிழகத்தில் பெரும்பாலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு பகுப்புகளே தமிழர் வாழ்வின் அடையாளங்களாக சுட்டப்பட்டுள்ளன. எனினும், வறட்சி மிகுந்த மணல் காடுகளைக் குறிக்கும் பாலை நிலம் குறித்து அதிகமாக தமிழ் இலக்கியங்களில் பேசப்படவில்லை. வரலாற்று
ரீதியாக தமிழர்கள் வளம் சார்ந்த வாழ்க்கையே பெற்றிருந்தனர். 

உலகில் வறட்சியைக் குறிக்கும் மணல் காடுகளான பாலை வனங்கள் சில நாடுகளில் குறிப்பாக அரபு நாடுகளில் பொருட் சுரங்கங்களாக விளங்குவதை 1960களுக்குப் பிறகு கண்டறியப்பட்டுள்ளன. அரபு  நாடுகளின் சில பாலைவனங்கள் உலகின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் எண்ணெய் கிணறுகள் நிறைந்த பகுதியாக தற்காலத்தில் அமைந்துள்ளது. எனினும், மனித வாழ்விற்குத் தேவையான அடிப்படை குடிநீர், இயற்கை வளங்கள் இல்லாத சூழலில், சுட்டெறிக்கும் வெயிலும் இணைந்து மனிதர்களை கடற்கரை ஓரங்களிலேயே குடியமர்த்தியுள்ளது. நீர்வளமில்லா இந்த பாலை நிலத்தில் பால் சுரக்கின்றது என்பது நம்பத்தகுந்த செய்தியாக இல்லையெனினும், இன்று அரபு நாடுகள் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் மக்களின் அடிப்படைத் தேவையாக விளங்கும் பால், தயிர் மற்றும் பால் தயாரிப்புப் பொருட்கள் அனைத்தும் பாலைவனமாக விளங்கும் சவுதி அரேபியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம். அதுதான் உண்மை. தெளிவான இலக்கும் முயற்சியும் இருந்தால் வாய்ப்பின்றி அமையும் இயற்கைச் சூழலில் கூட ஒரு நாட்டிற்கு வாய்ப்பாக மாற்ற முடியும் என்பதற்கு சவுதி அரேபியாவில் நிறுவப்பட்டுள்ள அல்மாரை (Almarai) நிறுவனமே சான்றாகும்.

சவுதி அரேபியாவிலுள்ள அல்மாரை நிறுவனத்தை நேரில் கண்டு வியந்த காட்சிகளே இங்கு ஒரு செய்திச் சுருளாக நம் வாசகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

பாலைவனம் என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது பரந்த மணல் பரப்புகள், கொளுத்தும் வெயில், நீரற்ற நிலப்பகுதி மற்றும் ஒட்டகம் ஆகியவையே. ஆனால் இத்தகைய பாலைவனத்திலிருந்து பால் உற்பத்தி செய்யப்பட்டு, நாடு முழுவதும் விநியோக்கிப்படுவதென்பது, மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும்.

மிகப் பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள அல்மாரை எனும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத் (Riyadh) நகரில் நிறுவப் பெற்றது.

 இந்நிறுவனத்தின் பண்ணைகள் தலைநகரிலிருந்து 80 கி.மீ தொலைவிலுள்ள அல்-கார்ஜ் (Al-kharj) என்னும் பாலைவனத்தில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் 300 பசுக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பண்ணை தற்போது 450 மடங்கு அதிகரித்து, மொத்தம் 6 பண்ணைகளையும், 1,35,000 (ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம்) பசுக்களையும் பராமரிக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. 

அல்மாரை தொழிற்சாலை சற்றொப்ப 2,68,000 ச.மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. சரி, இனி எவ்வாறு இந்த பாலைவனப் பரப்பில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பார்ப்போம். 

பால் உற்பத்தியை பெருக்க முதலில் பசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். எனவே அனைத்து பசுக்களும் செயற்கை முறையில் ஊசி மூலம் கருத்தரிக்கப்படுகின்றன. 

பசுப் பண்ணைகளுக்கு அருகாமையில் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய ஓர் மருத்துவக் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவுற்ற மாடுகள் கன்று ஈனுவதற்கு 35 நாட்களுக்கு முன்பு இந்த மருத்துவக் கூடாரத்தில் விடப்படுகின்றன. இத்தகைய பசுக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மருத்துவ வல்லுநர்களால் கண்காணிக்கப்படுகின்றன. பின்னர் இவை கால்நடை மருத்துவர்களின் உதவியால் பாதுகாப்பான முறையில் இயற்கையாக கன்றை ஈன்றெடுக்கின்றன. 

கன்றுகளை சுத்தம் செய்த பின், அவற்றின் தொப்புளில் அயோடின் தடவப் படுகிறது. ஒவ்வொரு கன்றும் பிறந்தவுடனே அதன் இரு காதுகளிலும் அடையாள எண் அட்டை பொருத்தப்படுகிறது. பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இக்கன்றுகள் தனிப்பட்ட முறையில் பராமரிக்கப்படுகின்றன. இத்தகைய பாலைவனத்தில் பிறந்த இளம் பசுக்களுக்குத் தேவையான தீவனம் வழங்குவதென்பது மிகவும் சவாலான ஒன்றாகும். 

பசுக்களுக்கான தீவனத்தை தயாரிப்பதற்காக 12 இணைப்புக் கலவை இயந்திரங்கள் (Joint Mixing Machine) பயன்படுத்தப் படுகின்றன. முதலில் அதிக புரதச் சத்து நிறைந்த புல் கட்டுகளை இந்த இயந்திரத்திற்குள் போட்டு, நன்கு சிறு சிறு துண்டுகளாக ஆகுமளவிற்கு அரைக்கப்படுகின்றன. 

பின்னர் இவற்றுடன் தண்ணீர் கலக்கப்படுகிறது. மேலும், பொடியாக அரைக்கப்பட்ட சோளம், சோயா பீன்ஸ் ஆகியவையும் இவற்றுடன் சேர்க்கப்படுகிறது. இத்தகைய ஈரப்பதமிக்க உணவு ஒட்டுமொத்தமாக வாகனத்தில் நிரப்பப்படுகின்றன. இக்கலவையில் சேர்க்கப்பட்டுள்ள சோளம், சோயாபீன், தண்ணீர் மற்றும் புரதச் சத்துகளின் சேர்ம விகிதத்தின் துல்லியமான அளவுகளை நிறுவனங்கள் இரகசியமாக பாதுகாக்கின்றனர். 

இவ்வாறு சராசரியாக ஒரு நாளைக்கு 1,200 அளவு டன் தீவனங்கள் தயாரிக்கப் படுகின்றன. இவற்றை வாகனத்தின் பக்கவாட்டின் வழியாக இருபுறமும் வரிசையாக நிற்கும் இளம் பசுக்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பசுக்கள் 700 கிலோ எடையை அடைந்ததும் பால் கறவைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. 

முதலில் அதிக பால் சுரக்கக் கூடிய பசுக்களைத் தனியாக பிரித்து, அவற்றின் தரத்தை உணர்த்தும் விதமாக, பசுக்களின் பின்புறம் ஏ (A) எனும் ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது. தற்போதைய கணக்கீட்டின் படி, 6 பண்ணைகளிலிருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய வளர்ச்சியை எட்டுவதற்கு, பசுக்கள் வசிப்பதற்கு தேவையான காற்றோட்டம் மற்றும் மிதமான தட்பவெப்ப நிலையுடன் கூடிய வசதிகள் தேவை. 

எனவே பசுக்கள் தங்களின் தீவனத்தை உண்ட பின், 1 மணி நேரத்திற்கு குளிர் பதன அறைகளில் அடைக்கப்படுகின்றன. இந்த குளிர் பதனம் பொருத்தப்பட்ட அறைகளில் பசுக்களுக்கு நிம்மதியும் (தளர்வும்), குளிர்ச்சியும் கிடைக்கிறது. இந்த ஒரு மணி நேர ஓய்வுக்குப் பின் பசுக்களின் மடிகளில் பல தானியியங்கி குழாய்கள் மூலம் தண்ணீர் பீச்சப்படுகின்றன. 

பின்னர் பசுக்கள் பால் கறக்கும் பகுதிக்கு அழைத்து வரப்பட்டு அனைத்து பசுக்களையும் அதன் காதுகளில் பொருத்தப்பட்டுள்ள எண்களின் அடிப்படையில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. பின்னர் நான்கு வளையங்களால் (ரிங்) ஆன பால் கறக்கும் பொறிகலன் மூலம் பால் கரக்கப்படுகிறது. 

இவ்வாறு கறக்கப்பட்ட பால் வளையத்துடன் கூடிய குழாய் வழியாக பால் சேமிக்கும் அறைக்கு நேரடியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய அனைத்து பணிகளும் இயந்திரத்தின் உதவியால் தானாகவே நடைபெறுகிறது.

பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு பசுவிடமிருந்து சற்றொப்ப 19 லிட்டர் பால் கறக்கப்படுகிறது. ஒவ்வொரு பசுக்களின் இடது காலிலும் நுண் சில்லுகள் (மைக்ரோ சிப்ஸ்) பொருத்தப்பட்டுள்ளன. 

இத்தகைய மைக்ரோ சிப்புகளால் கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்தவாரே ஒவ்வொரு பசுவும் எவ்வளவு பாலைக் கறந்துள்ளன என்பதை அறிந்து, எதிர்பார்த்த அளவு பால் கறக்கப்பட்ட பின், தானாகவே காம்புகளிலிருந்து பொறிகலன்கள் விடுவிக்கப்படுகின்றன. எனவே மைக்ரோ சிப்புகளால் பசுக்களின் செயல்பாடுகளை அறியவும், கட்டுப்படுத்தவும் முடிகிறது. இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் வெறும் 12 நிமிடங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. 

பால் கறந்த பின்பு பசுக்களின் காம்புகளில் பாக்டீரியா போன்ற நோய் தொற்று பரவாமல் இருக்க, மருந்து கலந்த ஸ்ப்ரே தெளிக்கப்படுகிறது. கறக்கப்பட்ட மொத்தப் பாலும், குழாய்கள் வழியாக வடிகட்டப்பட்டு, வைப்புக் குழாயில் 3டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் குளிர்விக்கப்படுகிறது. 

இவ்வாறு 6 பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட 2.5 மில்லியன் (இருபத்தைந்து இலட்சம்) லிட்டர் பால் குளிர்விக்கப்பட்ட பின், பண்ணையின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய கொள்கலனில் நிரப்பப் படுகிறது. பின்னர் இந்த பால் ஒரு மணி நேரத்தில் 30,000 லிட்டர் வீதம், குளிரூட்டிப் பொருந்திய 80 கனரக வாகனங்களுக்கு மாற்றப்படுகிறது. கனரக வாகனங்களுக்கு மாற்றப்பட்ட பால் அங்கிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள அல்மாரை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அல்மாரை தொழிற்சாலை பணியிடப் (சுத்திகரிப்பு / ப்ராஸசிங்) பகுதி, பொத்தல் தயாரிப்பு பகுதி (லேபிளிங்) மற்றும் நிரப்பும் பகுதி (ஃபில்லிங்) என முன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. கனரக வாகனங்கள் தொழிற்சாலையை வந்தடைந்ததும், முதலில் வாகனத்திலுள்ள பாலை 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட 7 மெகா கொள்கலனிற்கு மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது. 

பின்னர் பால் தொழிற்சாலைக்குள் வந்ததும் முதலில் அவற்றில் ஏதேனும் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதா அல்லது தரத்தில் மாற்றம் உள்ளதா என ஆய்வுக் கூடத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. அதன் பின் பால் 78 டிகிரி வெப்பநிலையில் கொதிக்க (பாஸ்டிரைஸ்டு) வைக்கப்படுகிறது. பாஸ்டிரைஸ்டு என்பது பாலை கொதிக்க வைத்துக் கிருமிகளை கொன்று, பின் குளிர வைக்கும் முறை ஆகும். இதன் மூலம் பாலிலுள்ள பாக்டிரியாக்கள் கொல்லப்படுகின்றன. 

மேலும் ஹோமோஜீனியேசன் இயந்திரத்தால் பால் பாஸ்டிரைஸ்டு செய்யப்படுவதால், பாலிலுள்ள கொழுப்புச் சத்து குறைக்கப்படுகிறது. பின்னர் அவை மீண்டும் குளிரூட்டப்படுகிறது. தற்போது அனைவரும் பருகுவதற்கு ஏதுவான பால் தயாராகி விட்டது.

இத்தகைய பாலை நிரப்புவதற்கென்றே பிரத்யேக முறையில் பிளாஸ்டிக் கேன்கள் (குழைமப் பொத்தல்கள்) வடிவமைக்கப்பட்டு, அல்மாரை தொழிற்சாலையின் பணியிடப் பிரிவில் உருவாக்கப் படுகிறது. பயன்படுத்தப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் பிற நெகிழிச் (பிளாஸ்டிக்) சாமான்கள் போன்றவையே இத்தகைய பிளாஸ்டிக் கேன்களை உருவாக்குவதற்கான மூலப் பொருள்கள் ஆகும். 

இவற்றை 40 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் உருக்கி, அதன் மூலம் பெறப்பட்ட பிளாஸ்டிக் எச்.டி.பி.ஈ (HDPE) மூலப் பொருள்களைப் பிளெண்டிங் இயந்திரத்தின் உதவியால் 190 டிகிரி வெப்ப நிலையில் பிளாஸ்டிக் கேன்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கேன்களில் பாலை நிரப்புவதற்கு முன்பு, அதற்கான மூடியை உருவாக்குவது முகவும் முக்கியமானதாகும். 

எனவே பிளாஸ்டிக் கேன்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அதற்கு ஈடாக ஒரு மணி நேரத்தில் 17,000 மூடிகள் தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் கேன்கள் உருவாக்கப்பட்டதும் அவைகள் பால் நிரப்பும் பகுதிக்கு கொண்டு செல்வதில்லை. அதற்கு முன்பு லேபிளிங் யூனிட்டில் கேன்களில் அல்மாரை நிறுவன விவரங்களடங்கிய லேபிள் ஒட்டப்படுகின்றன. 

அதன் நிரப்புப் பகுதியில் (ஃபில்லிங் யூனிட்டில்) ஒவ்வொரு கேன்களிலும் பாலை நிரப்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 4 விநாடிகள் மட்டுமே. ஒரு சுற்றில் 60 கேன்கள் நிரப்பப்படுகின்றன. பாலை நிரப்பிய பின், ஒவ்வொரு கேனின் லேபிளின் மேல் பால் நிரப்பப்பட்ட தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட வேண்டும். 

இறுதியில் இவை அனைத்தும் சரியாக மூடப்பட்டுள்ளனவா என்பதை லேசர் கருவி மூலம் சரிபார்க்கப் படுகிறது. இத்துடன் பணி நிறைவடைந்து விட வில்லை. பால் நிரப்பப்பட்ட அனைத்து கேன்களைச் சுற்றிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு, குளிர்விக்கப்படுகிறது. 

இவ்வாறு பிளாஸ்டிக் கேன்கள் தயாரித்து அவற்றில் பாலை நிரப்பி மூடியால் மூடும் பணி வரை அனைத்தும் இயந்திரமயமாக்கப் பட்டுள்ளது. எவ்வித மனித வேலைப்பாடுகளும் இவற்றில் அவசியமற்றது.

தற்போது பால் உற்பத்தி செய்யப்பட்டு கேன்களில் அடைக்கப்பெற்றாகி விட்டது. இவற்றை விநியோகப் பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சவுதி அரேபியாவில் மொத்தம் 65 இடங்களில் அல்மாரை சேமிப்பு பெட்டகங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு தயாரிக்கப்படும் அனைத்து பால் பொருள்களும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. 

அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பால் விநியோகம் செய்வதற்கு 3,200 கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அல்மாரை கனரக வாகனங்கள் ஓராண்டிற்கு ஏறத்தாழ 193 மில்லியன் கி.மீ. பயணித்து நாட்டின் அனைத்து விற்பனையகத்திலும் கிடைக்கச் செய்கின்றன. தற்போது இந்த பசுக்களின் பால் மத்திய கிழக்கு நாடுகளின் அனைத்து பெரும் அங்காடிகளிலும் (சூப்பர் மார்க்கெட்டிலும்) விற்கப் படுகின்றன.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்கிற பழமொழி தமிழிலே இருந்தாலும், அரேபியர்களின் தளராத முயற்சியும் தெளிவான பார்வையும் நாம் வியக்கும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன. இது போன்ற மாற்றங்களை இந்திய நாடு எப்போது கற்றுக் கொள்ளும்? 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.