Breaking News
recent

வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம்-அரசு மானியம்!



வீட்டின் மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
“நீங்களே செய்து பாருங்கள்’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் முதல் கட்டமாக சென்னை மற்றும் கோவையில் புதன்கிழமை (டிச.18) தொடங்கப்பட்டது.
இதற்கான தொடக்க விழா வேளாண்துறை அமைச்சர் செ.தாமோதரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இந்தத் திட்டத்தின் கீழ், வீட்டு மாடியில் தோட்டம் அமைக்கத் தேவையான காய்கறி விதைகள், உரங்கள், பாலிதீன் பைகள் உள்ளிட்டவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
என்னென்ன காய்கறிகள்: கத்தரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை, கொத்தவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி ஆகியவற்றை மாடி தோட்டத்தில் வளர்க்கலாம்.
இந்த செடிகள் அனைத்தையும் வளர்க்க மொட்டை மாடியில் 160 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது. இதற்கான மகசூல் காலம் 30 நாள்களில் இருந்து 6 மாதங்கள் வரை ஆகும்.
மாடித் தோட்டம் அமைப்பதன் மூலம் 1 கிலோ முதல் 15 கிலோ வரை காய்கறிகள் மற்றும் கீரைகளை மகசூலாகப் பெறலாம். இதற்கு தேவையான பொருள்கள் மானிய விலையில் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.
மானியமாக கிடைக்கும் பொருள்கள்: 2 கிலோ தேங்காய் நார் கழிவுடன் கூடிய 20 பாலிதீன் பைகள், 9 வகையான காய்கறிகளின் விதைகள், 6 வகையான உரங்கள், மண் கரண்டி, மண் அள்ளும் கருவி, நீர்த் தெளிப்பான், பிளாஸ்டிக் பூவாளி, குழித்தட்டுகள் மற்றும் பாலிதீன் விரிப்புகள் உள்ளட்டவை மாடித் தோட்டம் அமைக்க தேவையான பொருள்களாகும்.
ரூ.2 ஆயிரத்து 414 மதிப்பு கொண்ட அந்த பொருள்களை, 50 சதவீத மானியத்தில் ரூ.1,207-க்கு தமிழக அரசு வழங்குகிறது. ஒரே நபருக்கு 5 முறை மானிய விலையில் தோட்டம் அமைக்கத் தேவையான மூலப் பொருள்கள் வழங்கப்படும்.
எங்கு அணுகுவது?: சென்னை – தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாதவரம், சென்னை – 51. தொலைபேசி: 044 – 25554443.
கோவை – தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், 8, தடாகம் சாலை, கோவை – 641013, தொலைபேசி: 0422 – 2453578.
www.tnhorticulture.tn.gov.in என்ற தோட்டக்கலைத் துறையின் இணையதளம் வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம்.
முன்னதாக இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சர் தாமோதரன் பேசியது:
இந்தியாவில் காய்கறி உற்பத்தி அதிகரித்ததற்கு தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானது. உற்பத்தி திறனில் தேசிய அளவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள நகரவாசிகள், தங்களுடைய வீட்டின் மொட்டை மாடியில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக ரூ.5 கோடி செலவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதில் பெண்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்றார் அவர்.
மாடி தோட்டம் அமைக்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: இந்த திட்டம் சென்னை மற்றும் கோவையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான உரங்களைத் தயாரிக்க சென்னையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இங்கு உணவுக் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும் குப்பைகள் என அனைத்து விதமான குப்பைகளும் கிடைக்கின்றன.
இந்த திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி தனி கவனம் செலுத்தும் என்று மேயர் தெரிவித்தார்.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

கொல்லாபுரம் S.M.சாதிக் சொன்னது…

http://puthumanaikpm.blogspot.com/2012/09/blog-post_294.html
இந்த வலைதளத்தில் எங்கள் வீட்டு மாடியில் காய்கறி தோட்டத்தை வந்து பாருங்கள்

Blogger இயக்குவது.