Breaking News
recent

எங்க ஊரு வி. களத்தூரு............


எங்க ஊரு வி. களத்தூரு.. - நாங்க
நல்ல சங்கைமிகு தீன் குலத்தோரு..!
ஊரை சுற்றி ஓடுது கல்லாறு..! - அங்கே
செம் மண்ணும் கூட மலர்ந்திடும் பாரு..!
எங்க ஊரு பேரு சொன்னா...
...
ஊரு பேருகூட மணக்கும். - சொல்லும்
நாவும்கூட இனிக்கும்.

(எங்க ஊரு..)

சாதி சமயம் இங்குண்டு.. வேற்றுமையில்லை! - நாங்கள்
சமத்துவத்தை கடைப்பிடிக்கும், ஒருதாய் பிள்ளை!
வஞ்சகமோ பொய் நஞ்சகமோ துளியும் இல்லை! - இங்கு
வந்தவர்கள் வாழ்ந்ததுண்டு, தோற்ற சரித்திரமில்லை!
வறுமையென்று வருவோருக்கு, உணவை பகிர்ந்து தருவோம். - நல்
உறவை நாடி வருவோருக்கு, எங்கள் உயிரையும் பிழிந்து பகிர்வோம்!

(எங்க ஊரு..)

கடமை கண்ணியம் கட்டுப்பாடெல்லாம்.. ஊரின் பரம்பரை சொத்து..!
நம்பிக்கை நேர்மை உழைப்பே இந்த விருட்சத்தின் முதல் வித்து!
எவருக்கு எந்த துயர் வந்தாலும், தோல் கொடுப்போம் தோழமைக் கொண்டு..
அன்னம் தேடும் காக்கைகள்கூட.. அதிசயிக்கும் எங்கள் ஒற்றுமை கண்டு!
இங்கு நிலத்தில் முளைத்த முற்களும், பிறர் நலத்தை என்றும் விரும்பும். - ஊருக்குள்
மறந்து நுழையும் பகைமைகூட நல்லறம் பயின்று திரும்பும்!

(எங்க ஊரு..)

ஒருமுறை தமிழ் தாத்தா ஊ.வே.சா இங்கு வாசம் கண்டாரு..
இந்த வளம்கொழிக்கும் மண்மீது மிக நேசம் கொண்டாரு..! - எங்க
நட்பையும் நற்தமிழையும் கண்டு மெய்சிலிர்த்தாரு..! இந்த
ஊர் சிறப்பை தன் சுயக்குறிப்பில் எழுதிவச்சாரு!
ஆன்றோரும் சான்றோரும் அறிந்து அகம் மகிழ்ந்த ஊரு..! - எந்த
கணினியுகத்திலும் கொஞ்சமும் மாறாத மரபை நீயும் பாரு!

(எங்க ஊரு..)

எங்க ஊரின் தூய்மை கண்டு, தும்பையும் கொஞ்சம் கண் துயிலும்..! - எங்களின்
வெள்ளை மனதை வேடிக்கை காண, இங்கு வேனலில்கூட மழை பொழியும்!
ஊரின் நந்தவனத்தின் கொடியிலும் மலரிலும், தென்றலும் கொஞ்சி தலைவாறும்!
காணும் எழிலை எழுத சொற்களைத்தேடி செந்தமிழே கொஞ்சம் தடுமாறும்! - இங்கு
புண்ணகை பூக்கும் மலர்களைக் கண்டு புதிதாய் பிறக்கும் இலக்கணம்!
பூத்துக் குலுங்கும் அழகைப்பாட எந்த கவிதைக்கும் வரும் தலைக்கனம்!

(எங்க ஊரு...)

நூல் நூற்றும், கற்றாழை இழைத்தும் கஞ்சிக்குடித்தாலும்
நல்ல கண்ணியம் காத்த எம் பாட்டியும்..
கொடிக்கால் அமைத்தும், வெற்றிலை சுமந்தும்
ஊர் ஊராய் உண்மைக்கு உழைத்த எம் பாட்டனும்..
கண்ட கணவெல்லாம் நிறைந்தது இன்று! - அவர்களின்
எட்டாக் கனியான கல்வியை வென்று!
வீட்டுக்கு வீடு பட்டதாரிகள் ஒருவரேனும் இருப்போம் குறைந்தபட்சம்..
இவையெல்லாம் முப்பாட்டன் எம்மீது அக்கறைக்கொண்ட உழைப்பின் மிச்சம்!

(எங்க ஊரு...)

சிலம்பம் கம்புச்சுத்து குத்துச்சண்டை என தற்காப்புப் பயிற்சியும்..
மரபு மாறாத, வரம்பு மீறாத வீரவிளையாட்டெல்லாம்.. - எம்
முன்னோர்கள் கற்றுத்தந்த பாடம். - இங்கு..
வீரத்தில் சிற்றெரும்புக்கூட வேங்கையாய் ஒருகணம் மாறும்..!
இந்து இஸ்லாம் கிருத்துவம் என்று வீட்டுக்குள் மாறுபடும் வணக்கம்..
நட்பே சமுதாயத்தின் தலையாய தூண் என, அனைவரும் கைகோர்க்கும் இணக்கம்!
இது நாட்டின் நல்ல முன்மாதிரி ஊரென்று உலகே எமைக்கண்டு வியக்கும்!
ஒற்றுமைக்காக்கும் வி.களத்தூர்.. இது ஊரல்ல.. “ஒரு நற்பனி இயக்கம்”

பாடலுக்கான கவிதை; வசந்தவாசல் அ.சலீம்பாஷா.
VKALATHURONE

VKALATHURONE

1 கருத்து:

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

முகநூலிலிருந்து கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி! மகிழ்ச்சி!!

Blogger இயக்குவது.