Breaking News
recent

குழந்தை வயிற்றுக்குள் குழந்தை!



ஊட்டச்சத்துக் குறைபாடு காரண​மாக அதிக அளவில் குழந்தைகள் இறப்பதில் முன்னணி வகிக்கும் தர்மபுரியில்தான் இந்த பரபரப்புச் செய்தியும். தாயின் வயிற்றுக்குள் வளரும் ஒரு குழந்தையின் வயிற்றில் இன்னொரு குழந்தை வளர்வதாகச் செய்தி வெளியானது.
உலகத்தில் பிறக்கும் ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது என்று மருத்துவ உலகம் தெரிவிக்​கிறது. அப்படி ஒரு குழந்தையின் வயிற்றினுள் வளரும் இன்னொரு குழந்தையை முழு வடிவமாகப் பார்க்க இயலாது. 
உயிராக இந்த மண்ணில் தவழச் செய்ய முடியாது. என்ன காரணத்தினால் இப்படி ஏற்படுகிறது என்பது மருத்துவர்​களால் கண்டுபிடிக்க முடியாத சவாலாக இருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியை அடுத்து உள்ள வட்டகானப்பட்டியைச் சேர்ந்த ரேவதி, தன்னுடைய முதல் பிரசவத்துக்​காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 
ஆனால், அவருக்குப் பிறந்த 1.8 கிலோ எடையுள்ள பெண் குழந்தை இறந்தே பிறந்தது. காரணம், ‘கருவுக்குள் இருந்த கரு’!
இதுகுறித்து தர்மபுரி அரசு மருத்துவமனையின் மகப்பேறு துறைத் தலைவர் மலர்விழியிடம் பேசினோம். ”5 லட்சம் குழந்தைகளில் ஏதேனும் ஒரு குழந்தைக்கு இதுமாதிரியான கரு உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. 
பிரசவத்துக்காக வந்த ரேவதியை ஸ்கேன் செய்து பார்த்ததில், எட்டு மாதக் குழந்தையின் வயிற்றுக்குள் கட்டி இருப்பதுபோன்றும் பின்பு, இன்னொரு குழந்தை இருக்கிற மாதிரியும் தெரிந்தது. 
மேலும், குழந்தைக்கு உள்ளே இருந்த குழந்தைக்கும் தொடை மற்றும் முதுகு தண்டுவட எலும்புகள் இருப்பது உறுதியானது. குழந்தையின் வயிற்றுக்குள் உருவாகும் குழந்தை முழுமையான குழந்தையாக உருவாகாது. முக்கியமான உறுப்புகள் மட்டும்தான் அதில் வளரும். 
அப்படித்தான் இந்தக் குழந்தையும். அந்தக் குழந்தை பிறந்தபிறகு இறப்பதற்கோ, இறந்தே பிறப்பதற்கோ வாய்ப்பிருக்கிறது என்று அந்தத் தம்பதியிடம் தெரி​வித்​தோம். பின்னர் சுகப்பிரசவத்தில் பிறந்த அந்தப் பெண் குழந்தை, இறந்தே பிறந்தது.  
இறந்த குழந்தையை மறுபடியும் தனியாக ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், உள்ளே எலும்புகள் இருப்பது உறுதியாயின. இதை ‘fetus in fetu’ என்று சொல்வார்கள். தனித்தனியாகப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். 
‘மாற்றான்’ படத்தைப்போல தலை, கால் என்று உடலுறுப்புகள் எல்லாம் ஒட்டியிருக்கும் இரட்டைக் குழந்தைகளையும் பார்த்​திருப்பீர்கள். இது ஒட்டிப் பிறக்காமல் குழந்தையின் வயிற்றுக்​குள்ளேயே வளர்வது” என்று விளக்கம் அளித்தார்.
ரேவதியின் கணவர் சங்கர் நம்மிடம், ‘எங்களுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது. ரேவதி எங்க அக்கா பொண்ணுதான். ரெகுலரா செக்கப் போயிட்டுத்தான் இருந்தோம். 
திடீர்னு குழந்தை வயித்துக்குள்ள கட்டிமாதிரி இருக்குனு சொன்னாங்க. இப்ப குழந்தை வயித்துக்குள்ள இன்னொரு குழந்தை இருந்துச்சு… அதனால குழந்தை இறந்துடுச்சுன்னு சொல்றாங்க” என்று கண்கலங்கினார்.
இதுவரை உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுமாதிரியான குழந்தைகள் பிறந்து அதிசயிக்க வைத்திருக்கின்றன. 2003-ல் இங்கிலாந்தில் அமன்ஜூன் என்கிற எட்டாம் வகுப்பு மாணவனின் வயிற்றில் குழந்தைக்கான உடலுறுப்புகளோடு இருந்த குழந்தையைக் கண்டுபிடித்து அகற்றியிருக்கிறார்கள். 
2006-ல் பாகிஸ்தானில் இரண்டரை மாத குழந்தையின் வயிற்றில் இதுபோன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. 1999-ல் இந்தியாவின் நாக்பூரில் சஞ்சுபாரத் என்கிற 36 வயது பெண்ணின் வயிற்றுக்குள்ளும் அதுமாதிரியான சிசு இருந்​தது கண்டறியப்பட்டு அகற்றப்​பட்டது.
சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமாரிப்புத் துறைத் தலைவர் குமுதாவிடம் பேசினோம். ‘இரட்டைக் குழந்தைகள், ஒரே எம்பிரியோவிலிருந்து பிரிந்து இரண்டு குழந்தைகளாக வளரும். 
அதுவே சில சமயங்களில், அப்படி வளரும்போது ஒரு குழந்தைக்குள் இன்னொரு குழந்தையாகப் போய் வளர்ந்துவிடும். குழந்தையின் வயிற்றுக்குள் நிறைய இடம் இருப்பதால் அங்கே தங்கிவிடுகிறது. 
அப்படி வயிற்றுக்குள் போனதும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு இறந்துவிடும். உள்ளே வளரும் குழந்தைக்கு மூளை இருக்காது. இதை ஸ்கேன் செய்யும்போது கண்டுபிடித்துவிடலாம். 
இதை அறுவைச் சிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும். அப்படி எடுக்காவிட்டால் பின்நாட்களில் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு உண்டு’ என்று சொன்னார்.
மெடிக்கல் மிராக்கல் என்ற வாக்கியத்தை மருத்துவத் துறையில் அடிக்கடி சொல்வார்கள். ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆச்சர்யம் இல்லை, துக்கம்!
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.