Breaking News
recent

பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் – இஸ்லாமிய கூட்டமைப்பு.!(photos)


ஷரீயத் சட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படுகிறது. பொது சிவில் சட்டத்தை மத்திய பாரதீய ஜனதா அரசு திணித்தால் அதனை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று கோவையில் நடைபெற்ற அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயன்றுவரும் மத்திய அரசை கண்டித்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் ஷரீயத் சட்ட பாதுகாப்பு மாநாடு கோவை கரும்புக்கடை மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. 

மாநாட்டுக்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.ஏ. இனாயத்துல்லா தலைமை தாங்கினர். கே.ராஜா உசேன் வரவேற்று பேசினார். இந்த மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது:ஷரீயத் சட்டத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சொத்து உரிமை, திருமண உரிமை மற்றும் விவாகரத்து உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வழங்கி உள்ளது. 

இது இறை சட்டம் ஆகும். மத்திய பாரதீய ஜனதா அரசு வேண்டும் என்றே முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொது சிவில் சட்டத்தை திணிக்க பார்க்கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு இந்த சட்டத்தை கொண்டு வர விடாமல் தடுப்போம்.

 பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 கோடி முஸ்லிம் பெண்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தில் பிரிவு 25 வழங்கியுள்ள மத சுதந்திரத்தை நசுக்கும் விதமாக மத்திய பாரதீய ஜனதா அரசு நடந்து கொள்கிறது. அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் சார்பில் கொல்கத்தாவில் வருகிற 18 மற்றும் 19–ந்தேதி மாநாடு நடைபெறுகிறது. 

இதில் தமிழ்நாட்டில் நான் உள்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறோம். பொது சிவில் சட்டத்தை திணிக்க மத்திய பாரதீய ஜனதா அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வரும் தேர்தலில் அந்த கட்சி பெரிய தோல்வியை சந்திக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹலான் பாகவி ஆகியோர் பேசும்போது, ஷரீயத் சட்டம்தான் சரியான சட்டம். இதில் முஸ்லிம் பெண்கள் உள்பட அனைவருக்கும் சரியான நீதி கிடைக்கிறது. 

பொது சிவில் சட்டத்தை ஒரு போதும் ஏற்க மாட்டோம். இதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபட்டு நின்று மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்’ என்று தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:ஒவ்வொரு இந்திய குடிமகனும் தான் விரும்பும் மதத்தை பின்பற்றி வாழவும், அதை பரப்பவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக பாரதீய ஜனதா அரசு கொண்டு வர துடிக்கும் பொது சிவில் சட்டம் நாட்டில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளும் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

பொதுசிவில் சட்டத்தின் போர்வையில் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை துண்டிக்க நினைக்கும் பாரதீய ஜனதா அரசின் சதி திட்டத்தை முறியடிப்போம். 

போபால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 8 முஸ்லிம் இளைஞர்கள் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். இந்த படுகொலைக்கான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத், த.மு.மு.க. மாநில செயலாளர் ஜே.ஹாஜா கனி, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் செய்யது அகமது ஹுசைனி, கோவை ஜமாத்துல் உலமா சபை துணைத்தலைவர் எம்.ஏ. அப்துர்ரகீம் பாகவி, ஐக்கிய சமாதான பேரவை தலைவர் டி.எம்.என். ஹாமீத் பக்ரி, ஜாக் அமைப்பின் மாநில துணை பொதுச்செயலாளர் முகைதீன் பக்ரி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.







VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.