Breaking News
recent

அமெரிக்கா அதிபர் தேர்தலில் அபார வெற்றி - 45-வது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்.!


வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அந்நாட்டின் 45-வது அதிபர் ஆனார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளிண்டன் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்கினர்.
டொனால்ட் ட்ரம்ப்பை பொறுத்தவரை அரசியலில் தீவிரமாக ஈடுபடாதவர். ஆனால் ட்ரம்ப் திடீரென கடந்த ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்தார். ட்ரம்புக்கு குடியரசுக் கட்சியில் ஆதரவு பெருகியதால் அவரே அதிகாரப்பூர்வ வேட்பாளரானார்.
அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலரி க்ளிண்டன் போட்டியிட்டார். அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது. இன்று காலை முதல் வெளியான முடிவுகளில் ஹிலரி- ட்ரம்ப் இடையே இழுபறி தொடர்ந்தது.
ஒருகட்டத்தில் முன்னிலை பெறத் தொடங்கிய ட்ரம்ப் இறுதியாக 276 இடங்களை கைப்பற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஹலிரிக்கு 218 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இதனால் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபரானார். அதிபர் தேர்தலில் வென்றுள்ள ட்ரம்ப்க்கு ஹிலரி க்ளிண்டன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமக்கு வாக்களித்த மக்களுக்கு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது, நாட்டுக்காக நீண்டகாலம் சேவையாற்றியவர் ஹிலரி க்ளிண்டன் எனவும் புகழாரம் சூட்டினார் ட்ரம்ப்.
ட்ரம்ப் பின்னணி...
1946 ஆம் ஆண்டு நியூயார்க் நகரின் குயீன்ஸ் என்ற இடத்தில் பிறந்தார் ட்ரம்ப். 13- வது வயதில் தனியார் ராணுவ பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார்.
பின்னர் அங்குள்ள ஃபோர்ட்காம் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார் டிரம்ப். கட்டுமான தொழில் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர் ட்ரம்ப்.
டிவி ரியாலிட்டோ ஷோக்களையும் நடத்தியவர். திடீரென அரசியல் களத்தில் குதித்து பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை எதிர்கொண்டு ஒருவழியாக அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வென்று வெள்ளை மாளிகையில் குடியேறிவிட்டார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.