Breaking News
recent

அபுதாபியின் பட்டத்து இளவரசருக்கு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு.!


டெல்லியில் அடுத்த (2017) ஆண்டு நடக்கும் குடியரசு தினவிழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பங்கேற்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்று அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்தியாவின் குடியரசு தின விழா அடுத்த (2017) ஆண்டு ஜனவரி மாதம் 26-ந் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. 

இந்த விழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் முக்கிய பிரமுகரை இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்துவது வழக்கம்.

அதேபோல் அடுத்த ஆண்டும் சிறப்பு விருந்தினர் ஒருவரை அழைப்பது என இந்திய அரசு முடிவு செய்தது. 

அதன்படி அபுதாபி பட்டத்து இளவரசரும், அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டரும், அபுதாபி நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சிறப்பு விருந்தினராக அழைப்பது என முடிவு செய்யப்பட்டது. 

இத்தகவலை இந்தியாவின் வெளியுறவு செயலர் விகாஷ் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இந்த விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதற்கு அபுதாபி பட்டத்து இளவரசர் தனது நன்றியினை தெரிவித்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. அந்த நாட்டின் குடியரசு தினவிழாவில் கலந்துகொள்ள தாங்கள் அனுப்பிய அன்பான அழைப்பிதழ் கிடைத்தது.

 இது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு வரலாற்று பூர்வமானது. 

இந்த பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மேலும் அதிகரிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்தில் 26 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு, இந்தியாவுக்கு 1,400 கோடி அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்து வருகிறது. 

அபுதாபி பட்டத்து இளவரசரின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.