Breaking News
recent

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் இந்தியர்கள் தவிப்பு.!


சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. 
இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த  இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர்.
இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில், மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த ‘சவுதி ஓஜர்’ என்ற நிறுவனமும் ஒன்று. இதன் சவுதி அரேபியா கிளையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். லெபனான் நாட்டு நிறுவனமான இதில் பணியாற்றி வந்த 800–க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வேலையிழந்து பட்டினியால் வாடுகின்றனர்.
இவர்கள் அல்–சுமைசியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வேறு சில கம்பெனிகளில் பணியாற்றி வேலையிழந்த இந்தியர்களுக்காக சிஸ்டன், சோஜெக்ஸ், ஹைவே, தைப் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் கடந்த பல நாட்களாக உணவின்றி பட்டினி கிடப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. சில முகாம்களில் கம்பெனி நிர்வாகத்தால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்தது.
பசி, பட்டினியால் வாடி வரும் இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பட்டினியால் வாடும் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதுடன், அங்கு வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இதைப்போல மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த பிரச்சனை குறித்த சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். அங்கு வேலை இழந்த எந்த இந்தியரும் உணவின்றி கைவிடப்படமாட்டார் என்று நான் உறுதி அளிக்கிறேன். 
இந்த பிரச்சினையை மணிக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வேலையின்றி தவிப்பவர்களை இந்தியா அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நாடுகளில் உள்ள 30 லட்சம் இந்தியர்களும் நமது சகோதர, சகோதரிகளுக்கு உதவ முன்வர வேண்டும். என கூறியிருந்தார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.