Breaking News
recent

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதலைத்தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்: காதர் மொகிதீன்.!


இந்தியாவில் முஸ்லிம்கள் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதல்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர தனிநபர்களின் கருத்துகளை அல்ல என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழகத் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் வெளிநாட்டினர் அதிகம் செல்லும் ஹோட்டலில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தருஷி ஜெயின் என்ற இந்திய மாணவி உள்பட 22 பேர் உயிரிழந்தனர். 

இத்தாக்குதலில் தொடர்புடையவர்களில் ஒருவரான ரோகன் இம்தியாஸ், மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைத்தளத்தில் பரப்பி இருந்தார்.

ஜாகிர் நாயக்கின் வன்முறை பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு வங்கதேச முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை வங்கதேச அரசு கேட்டுக் கொண்டது. 

மேலும் வங்கதேசத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான பீஸ் டிவிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழகத் தலைவர் காதர் மொகிதீன் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஜாகிர் நாயக் பேச்சுகள், செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்துவதாக செய்திகள் வந்துள்ளன. 

இதில் சட்டத்துக்கு முரணாக எதுவும் இருந்தால் சட்டம் தன் கடமையைச் செய்யலாம். ஜாகிர் நாயக் மிக முக்கியமான அறிஞர். இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் குரான்தான் புனிதமானது. சிலர் தங்களது புரிதல்களுக்கு ஏற்ப குரானுக்கு விளக்கம் சொல்ல முனைவது என்பது பாரம்பரியத்துக்கு எதிரானது.

 இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் வழிகாட்டுதல்களைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர தனிநபர்களை அல்ல. இவ்வாறு காதர் மொகிதீன் கூறியுள்ளார்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.